படித்தது 10ஆம் வகுப்பு.. கோவை மேயராக போட்டியின்றி தேர்வான ரங்கநாயகி யார்? முழு விபரம்!
Author: Udayachandran RadhaKrishnan6 ஆகஸ்ட் 2024, 12:14 மணி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகரில் தி.மு.க அமோக வெற்றியை பெற்றது. கோவையில் உள்ள 100 வார்டுகளில் 96 வார்டுகள் தி.மு.க கூட்டணி கைப்பற்றியது.
கல்பனா ஆனந்தகுமார் கோவையின் முதல் பெண் மேயரானார். முன்னதாக சென்னைக்கு பேருந்தில் சென்று தமிழகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தார்.
ஆனால் பதவி ஏற்றது முதல் கல்பனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. மாநகராட்சி அதிகாரிகளுடனும், ஒப்பந்ததாரர்களுடனும் கல்பனா மோதல் போக்கை கடைபிடித்து வந்ததாக அமைச்சர் கே.என்.நேருவிடமும் புகார் அளிக்கப்பட்டது.
இதனிடையே அவர் கடந்த மாதம் 3ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் மூலம் தெரிவித்தார்.
மேயர் கொடுத்த ராஜினாமா கடிதம் சிறப்பு கவுன்சிலில், அனைத்து கவுன்சிலர்கள் முன்னிலையில் கடந்த 8ம் தேதி முன்வைக்கப்பட்டது. இந்த கவுன்சில் மேயரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றது.
இந்த நிலையில், 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி தி.மு.க சார்பில் கோவை மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். அதன்படி, மேயரை தேர்வு செய்ய இன்று மறைமுக தேர்தல் நடைபெற்றதுஇதில் ரங்கநாயகி போட்டியின்றி வெற்றி பெற்று மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
கணபதிபுதூரை அடுத்த தரணி நகர் 8 வது வீதியை சேர்ந்தவர் ரங்கநாயகி. இவர் கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மூலம் தி.மு.க சார்பில் கோவை மாநகராட்சி 29 வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவரது கணவர் ராமச்சந்திரன், 29 வது வார்டு திமுக செயலாளராக உள்ளார். இந்த தம்பதிக்கு குகன் என்ற ஆண் குழந்தையும், வாகிணி என்ற பெண் குழந்தையும் உள்ளனர். ரங்கநாயகி 10ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
0
0