அவதூறுகளுக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை… ஆனா வார்த்தை முக்கியம் : அதிமுக வேட்பாளருக்கு சு.வெங்கடேசன் பதில்!

Author: Udayachandran RadhaKrishnan
3 April 2024, 6:26 pm
Su venkatesan
Quick Share

அவதூறுகளுக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை… ஆனா வார்த்தை முக்கியம் : அதிமுக வேட்பாளருக்கு சு.வெங்கடேசன் பதில்!

மதுரை மக்களவைத் தொகுதியின் அதிமுக சார்பில் டாக்டர் சரவணன் என்பவரும், திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சு.வெங்கடேசனும் போட்டியிடுகின்றனர்.

கடந்த 2019 மக்களவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி பெற்று மதுரை எம்பியாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நெருங்கும் வேளை என்பதால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கட்சி வேட்பாளர் மருத்துவர் சரவணன், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பற்றி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஏற்கனவே, பிரச்சார கூட்டத்தில் பைனாக்குலரை மூடி வைத்து சு.வெங்கடேசன் செய்த திட்டங்களை காண்கிறேன் என பேசி, இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளானார்.

இதனை தொடர்ந்து, அண்மையில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் அதிமுக வேட்பாளர் சரவணன் பேசுகையில், வெங்கடேசன் மக்களவை உறுப்பினருக்கான நிதியில் 17 கோடியில் 5 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்துள்ளார் என்றும், மீதம் உள்ள 12 கோடியை அவர் பயன்படுத்தவில்லை எனவும் கூறினார்.

இதற்கு பதில் கொடுக்கும் விதமாக, சு.வெங்கடேசன், தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அதில், எனக்கு ஒதுக்கப்பட்ட 17 கோடி ரூபாயில் 16 கோடியே 96 லட்சம் ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 245 பணிகளை தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து செய்துள்ளோம்.

ஆனால், மருத்துவர் சரவணன் 5 கோடி மட்டுமே பயன்படுத்தபட்டது என கூறுவது அப்பட்டமான ஓர் சந்தர்ப்பவாத அரசியல். ராஜாஜி மருத்துவமனையில் பெரும் தொற்று நோய் சிகிச்சைக்கான நிதி, அனைத்து அரசு நூலகங்களிலும் மாணவர் போட்டி தேர்வுக்கான நூல்கள், தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் தெப்பக்குள சுற்றுப்புறத்தில் உயர்மின் கோபுர விளக்குகள், இளைஞர்களுக்கான கபடி மைதானங்கள் என பல்வேறு பணிகளை செய்துள்ளோம்.

இப்படியான பல்வேறு உண்மைகள் இருக்க, 5 கோடி மட்டுமே செலவழித்ததாக அவதூறு பரப்பி வருகிறார் சரவணன். அவதூறுகளுக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை.

ஆனால், தாங்கள் உதிர்க்கும் சொற்களுக்கு நீங்கள் சட்டரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டி இருக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன்.

Views: - 131

0

0