திமுக பிரமுகர் வீடு மீது அடுத்தடுத்து நாட்டு வெடிகுண்டு வீச்சு…. பின்னணியில் பிரபல ரவுடி!

Author: Udayachandran RadhaKrishnan
17 August 2024, 8:24 am

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி மன்ற துணை தலைவர் அபிஷா ப்ரியா வர்ஷினி என்பவரின் கணவர் ஜெகன்(38). இவர் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார்.

ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். நேற்று மாலை ஜெகனின் வீட்டுக்கு 2 இரு சக்கர வாகனங்களில் மாஸ்க் அணிந்து வந்த மர்ம நபர்கள் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசினர்.

இந்த நாட்டுவெடி குண்டு வீச்சில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. திமுக பிரமுகர் ஜெகனின் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய அதே நபர்கள், சிறுணியம் பகுதியில் ஹாலோ பிளாக் கற்கள் மற்றும் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வரும் வெங்கடேசன் என்பவரது மகன்களான சரண்ராஜ் மற்றும் சுந்தர் ஆகியோரது வீட்டுக்குள் புகுந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவர்களது கார் மற்றும் தண்ணீர் கேன் வாங்க வந்தவர்களின் கார்களையும் அரிவாளால் வெட்டி, வீட்டின் ஜன்னல்களை அரிவாளால் வெட்டியும், நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தையும் சேதப்படுத்தி சென்றனர்.

இதேபோல, சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் லாரிகள் நிறுத்தும் இடத்தில் வெடிகுண்டை வீசிய அந்த கும்பல், சத்தம் கேட்டு வெளியே வந்த லாரி ஓட்டுநர் சிவா என்பவரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றது.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரில் சோழவரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி, தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் பிரபல ரவுடி டியோ கார்த்திக் என்பவர் தான், அவரது 3 கூட்டாளிகளுடன் அராஜகத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதனைதொடர்ந்து டியோ கார்த்திக்கின் செல்போன் எண்ணின் டவர் லொகேஷனை ஆய்வு செய்த போது, திருத்தணி அருகே ஆந்திர எல்லையில் இருப்பது தெரியவரவே, தனிப்படை காவல் துறையினர் ஆந்திர எல்லையில் முகாமிட்டனர்.

தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்ட போது, செல்போன் எண் அணைக்கப்பட்டதால், விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இதனையடுத்து செல்போன் லொகேஷனை கண்டறிந்த தனிப்படை காவல் துறையினர் ஆந்திராவில் பதுங்கி இருந்த டியோ கார்த்திக் (21), குதிரை சுரேஷ் (21) மற்றும் குண்டு கோபி (25) ஆகிய 3 பேரை கைது செய்து தமிழகம் அழைத்து வந்து சோழவரம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டு வெடிகுண்டு வீசிய 4 பேரில் 3 பேரை கைது செய்துள்ள சோழவரம் காவல் துறையினர், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

தொழில் போட்டி காரணமாக இந்த சம்பவங்கள் நடந்ததா எனவும், ரியல் எஸ்டேட் தொழில், கட்டுமான பொருள் சப்ளை செய்வோரிடம் ரவுடிகள் மாமூல் கேட்டு நாட்டு வெடிகுண்டு வீசினார்களா எனவும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!