ஆர்எஸ்எஸ் பிரமுகர் திடீர் கைது… திமுகவுக்கு எதிராக போலி செய்தி? கோவையில் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan7 June 2023, 10:28 am
கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவினர் அரசுப்பள்ளியில் சாராயம் காய்ச்சியதாக போட்டோஷாப் செய்யப்பட்ட செய்தி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது.
திட்டமிட்டே பொய்யான இந்தத் தகவலைப் பரப்பியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்லடம் திமுக இளைஞர் அணி அமைப்பாளர் பலசுப்பிரமணியம் என்பவர் கோவையில் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்தப் பொய்யான தகவலை முதலில் பரப்பியவர் யார் என்று விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து போட்டோஷாப் செய்யப்பட்ட செய்தியை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததாகக் கோவையைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சரவண பிரசாத் என்பவரைக் கைது செய்தனர். அவருக்கு வயது 52 ஆகும்.
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த கள்ளச்சாராய மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் அடுத்துள்ள மரக்காணம் எக்கியார்குப்பம் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் வாங்கிக் குடித்துள்ளனர்.
அவர்களில் பலருக்கும் வரிசையாக உடல்நலக்குறைவு ஏற்படவே, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருந்த போதிலும் அவர்களில் 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தனர்.
அதேபோல செங்கல்பட்டு மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் வாங்கி அருந்தியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவங்கள் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இருப்பினும், இதை வைத்து சிலர் பொய்யான தகவல்களை இணையத்தில் பரப்பி வருவதாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.