திமுக பிரமுகரின் ரிசார்ட்டில் திடீர் ரெய்டு : பின்னணியில் ஜிஎஸ்டி அதிகாரியின் மகன்..பெண்ணுடன் உல்லாசமாக இருந்தது அம்பலம்!
Author: Udayachandran RadhaKrishnan1 June 2024, 12:07 pm
திருச்சி மாநகர் உறையூர் பகுதியை சேர்ந்த ராஜாமணி என்கிற ஆட்டோ ராஜா மணி இவர் திமுகவின் முன்னாள் தலைமை கழக பேச்சாளராக இருந்தார்.
மேலும் இவருக்கு சொந்தமாக திருச்சி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மண்ணசநல்லூர் அருகே துடையூர் கிராமத்தில் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதி, உணவகம் மற்றும் நீச்சல் குளத்துடன் கூடிய பிரம்மாண்டமாக சோலை என்கின்ற பெயரில் சோலை ரிசார்ட் நடத்தி வருகிறார்.
இந்த ரிசார்ட்டுக்கு வருபவர்கள் கிராமத்திற்கு செல்கின்ற சூழ்நிலை போன்று இருக்கும் என்பதால் தொழில் அதிபர்கள், உயர் அதிகாரிகளின் மகன், மகள்கள், வசதி படைத்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த ரிசாட்டிற்கு வந்து தங்கி பொழுதை கழித்து செல்வார்கள்.
இந்த நிலையில் இந்த சோலை ரிசார்ட்-க்கு நேற்று காலை 10 மணி அளவில் மத்திய அரசின் வருமான வரித்துறை பிரிவில் இருக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு குழுவை சேர்ந்த அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் திடீரென வருகை தந்து இந்த ரிசார்ட்டின் வரவு செலவு கணக்குகள், வருகை பதிவேடுகள் மற்றும் ரிசார்ட்டை முழுமையாக ஆய்வு செய்தனர்.
மேலும் அவரது வீட்டிற்கு சென்றும் சோதனை செய்தனர். இந்த சோதனையில் அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளதென ஜிஎஸ்டி வரி துறையினர் சான்றிதழ் வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சோலை ரிசார்ட்-டின் உரிமையாளர் ராஜாமணி அதிர்ச்சியூட்டும் தகவலை கூறி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.
இன்று வந்த அதிகாரிகள் ஒரு பழி வாங்கும் நோக்கத்தில் தான் வந்துள்ளனர். ஏனென்றால் தற்போது சோதனைக்கு வந்திருக்கும் பெண் ஜிஎஸ்டி அதிகாரியின் மகன் நெப்போலியன் என்பவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இளம் பெண்ணுடன் சோலை ரிசார்ட் -க்கு வருகை தந்து ரூம் எடுத்து தங்கி உல்லாசமாக இருந்து உள்ளார்.
அப்போது மது போதையில் இருந்த நெப்போலியன் அவரது காதலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அந்த இளம் பெண்ணை தள்ளி விட்டதாகவும் அடித்ததாகவும் கூறப்படுகிறது இதனால் எல்இடி டிவி, ஏசியில் சிறிது பழுதும் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இது சம்பந்தமாக ரிசார்ட்டின் மேலாளர் வாத்தலை காவல் நிலையத்தில் தனது ரூமில் நெப்போலியன் என்பவர் இளம் பெண்ணுடன் தங்கி இருந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் டிவி மற்றும் ஏசியை உடைத்ததாகவும், இதற்கு நஷ்ட ஈடு கேட்டு புகார் அளித்துள்ளார்.
வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் நெப்போலியன் ஜிஎஸ்டி பெண் அதிகாரி மகன் என்பதாலும், சோலை ரிசார்ட் -டின் உரிமையாளரிடம் சமரசம் பேசி வாத்தலை போலீசார் நஷ்ட ஈடும் வாங்கிக் கொடுத்துள்ளனர் .
இதற்கு பழி வாங்குவதற்காக நெப்போலியன் அவரது தாயிடம் தெரிவித்ததால் தான் வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கத்தோடு பெண் ஜிஎஸ்டி அதிகாரி 10க்கும் மேற்பட்ட அதிகாரிகளை அழைத்துக் கொண்டு இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க: தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்கும் திமுக பெண் கவுன்சிலர் : வெளியான அதிர்ச்சி வீடியோ!
மேலும் எனது ரிசார்ட்டின் மேனேஜரையும் அடிக்க முயன்றதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோலை ரிசார்ட்டின் உரிமையாளர் ராஜாமணி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.