கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் திடீர் திருப்பம்… வெளியானது புதிய சிசிடிவி ஆதாரம் ; அடுத்தது என்ன…?

Author: Babu Lakshmanan
13 September 2022, 2:04 pm

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கில் தற்போது புதிய சிசிடிவி ஆதாரம் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

கனியாமூர் தனியார் பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி, விடுதியின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரி பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் மீது தற்கொலை தூண்டுதல் புகாரில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.

இதனிடையே, மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், பள்ளியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை வெளியிடாததால், பள்ளி நிர்வாகத்தின் மீது சந்தேகம் இருப்பதாகவும் மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டியிருந்தனர். அதுமட்டுமில்லாமல், தங்களது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களை சிறுமியின் தாயார் சந்தித்து பேசினார்.

அதேவேளையில், மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தில் புதியதாக ஆதாரம் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் படி, மாணவி உயிரிழந்த ஜூலை 13-ஆம் தேதி இரவு 7 மணியளவில் பள்ளி நிர்வாகத்துடன் செல்வி தரப்பு பேசியதாக ஆதாரம் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தரப்பில் அவரது தாய் செல்வி உட்பட 9 பேர் பேச்சுவார்த்தையில் இருந்தது தெரிய வந்துள்ளது.

பள்ளி நிர்வாகம் தங்களை அழைத்து பேசவில்லை என மாணவியின் தாய் குற்றச்சாட்டு முன்வைத்திருந்த நிலையில் ஆதாரம் வெளியிடப்பட்டது.

மாணவியின் மரணத்தில் பல்வேறு கருத்துக்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் இந்த சிசிடிவி ஆதாரங்கள், இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ