ரொம்ப சந்தோஷப்படாதீங்க… இது எல்லாம் பத்தாது ; கரும்பு கொள்முதல் விலையை மேலும் உயர்த்த ராமதாஸ் கோரிக்கை…!!!

Author: Babu Lakshmanan
22 February 2024, 1:42 pm

தமிழ்நாட்டில் ஒரு டன் கரும்பு உற்பத்திக்கு ரூ.3500 செலவாகிறது எனும் போது 50% லாபமாக ரூ.1750 சேர்த்து டன்னுக்கு ரூ.5250 கொள்முதல் விலை வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- இந்தியா முழுவதும் 2024-25ஆம் ஆண்டுக்கான அரவைப் பருவத்தில் 10.25% சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு 3,400 ரூபாயும், 9.50% அல்லது அதற்கும் குறைவானத் திறன் கொண்ட கரும்புக்கு 3150 ரூபாயும் கொள்முதல் விலையாக வழங்கப்படும் என்று டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தமிழக கரும்புகளுக்கு அதிகபட்ச சர்க்கரைத் திறன் 9.50% தான் இருக்கும் என்பதால், அவற்றுக்கு ரூ.3150 மட்டும் தான் கிடைக்கும். கரும்புக்கு இந்த விலை போதுமானதல்ல.

தமிழகத்தில் விளைவிக்கப்படும் கரும்புகளுக்கு கடந்த ஆண்டில் கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.2,919 வழங்கப்பட்டது. இப்போது ரூ.231 மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இது வெறும் 8% மட்டுமே உயர்வு ஆகும். இந்த கொள்முதல் விலையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் ஒரு டன் கரும்புக்கான உற்பத்திச் செலவு ரூ.3500-க்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதை விட குறைவாக கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமில்லை.

எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து வழங்கும் முறையை ஐந்தாண்டுகளுக்கு முன் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால், பயிர்களின் உற்பத்திச் செலவை கணக்கிடுவதில் நிலத்திற்கான குத்தகைத் தொகை உள்ளிட்ட பல செலவுகள் கணக்கில் சேர்க்கப்படுவதில்லை. மத்திய அரசு நிர்ணயிக்கும் கொள்முதல் விலை மிகவும் குறைவாக இருப்பதற்கு இது தான் முக்கியக் காரணம் ஆகும். இந்த சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்காகத் தான் நிலத்தின் குத்தகைத் தொகை உள்ளிட்ட செலவுகளையும் உற்பத்திச் செலவுடன் சேர்க்க வேண்டும்; அதை உறுதி செய்ய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்த உழவர்கள் தயாராகி வருகின்றனர். இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் தான் கொள்முதல் விலை சிக்கலுக்கு தீர்வு ஏற்படும்.

தமிழ்நாட்டில் ஒரு டன் கரும்பு உற்பத்திக்கு ரூ.3500 செலவாகிறது எனும் போது 50% லாபமாக ரூ.1750 சேர்த்து டன்னுக்கு ரூ.5250 கொள்முதல் விலை வழங்க வேண்டும். குறைந்தது டன்னுக்கு ரூ.5000 ஆவது வழங்க வேண்டும். மத்திய அரசு அதன் கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.4000 அறிவிக்க வேண்டும். தமிழக அரசு அதன் பங்குக்கு சர்க்கரை ஆலைகள் மூலம் ரூ.1000 ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும் என்று அறிவித்து உழவர்களுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கொள்முதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறினார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 428

    0

    0