எதுக்கு உடனடி அமைச்சர் பதவி? செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கோர்ட் அதிரடி கேள்வி!
Author: Hariharasudhan2 December 2024, 3:57 pm
ஜாமீன் கொடுத்த அடுத்த நாளே அமைச்சராக பொறுப்பேற்றது எந்த வகையில் நியாயமானது என செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்த மனு மீதான விசாரணையின் போது உச்ச நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.
டெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்தார். பின்னர், சமீபத்தில் செந்தில் பாலாஜி ஜாமீனில் வந்தார். இவ்வாறு அவர் ஜாமீனில் வந்த அடுத்த ஓரிரு நாட்களில் அமைச்சரவை மாற்றப்பட்டது.
இதனையடுத்து, செந்தில் பாலாஜிக்கு அவர் ஏற்கனவே வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை எதிர்த்து வித்யாகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவானது நீதிபதி ஏ.எஸ்.ஓகா முன்பு இன்று (டிச.02) விசாரணைக்கு வந்தது. அப்போது, “மனுதாரரின் குற்றச்சாட்டில் நியாயம் இருக்கிறது. செந்தில் பாலாஜி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள போது அவர் எப்படி அமைச்சராக பொறுப்பேற்க முடியும்?
அதுவும் நாங்கள் ஜாமீன் கொடுத்த அடுத்த நாளே நீங்கள் அமைச்சராக பொறுப்பேற்றது எந்த வகையில் நியாயமானது? என்னதான் நடக்கிறது? சாட்சிகள் அழுத்தத்திற்கு உள்ளாக நேரிடும் என்ற அச்சத்தை இப்போது நியாயப்படுத்துவார்கள். நீதி வழங்குவது மட்டுமல்ல, அது வெளிப்படையாகவும் செய்யப்பட வேண்டும் என்பதே அடிப்படைக் கொள்கை” என்றார்.
இதையும் படிங்க: ’நான் என் கடமையைத் தான் செய்றேன்’.. ஆனால், திமுக அரசு.. இபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
இதனையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. தொடர்ந்து, இதனை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை டிசம்பர் 13ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.