’தமிழக அரசு மதிக்கவில்லை’.. செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் காட்டம்!
Author: Hariharasudhan20 December 2024, 3:57 pm
நீதிமன்றத்தின் முடிவை தமிழக அரசு மதிக்கவில்லை என்பதால், நோட்டீஸ் அனுப்புகிறோம் என செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
டெல்லி: கடந்த 2014ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இந்தப் புகாரின் பேரில் செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியாகி, மீண்டும் மின்சாரத் துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், அமைச்சராகப் பொறுப்பேற்று உள்ள செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு எதிராக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளரை பதில் மனுதாரராக அளித்து பதில் தர உத்தரவிட்டு உள்ளது.
மேலும், அமலாக்கத்துறை வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”செந்தில் பாலாஜி சிறையில் இருந்த போது சக்திவாய்ந்த நபராக இருந்தார். தற்போது அவர் அமைச்சராகி உள்ளதால், வழக்கில் தாக்கம் செலுத்த வாய்ப்பு இருக்கிறது” என வாதத்தை முன் வைத்தார்.
வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள், போக்குவரத்துத் துறை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களில் உள்ள சாட்சியங்கள் குறித்த விவரங்களை ஜனவரி 15ஆம் தேதிக்குள் தர உத்தரவிட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: முதல்முறையாக களத்தில் எதிர்ப்பு குரல் தெரிவித்த தவெக.. தமிழக அரசு உத்தரவாதம்!
மேலும், “செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் வழக்கில் தமிழக அரசு என்ன சொல்ல வருகிறது? கடந்த முறை பதில் சொல்கிறோம் எனக் கூறியதால் தான் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை. ஆனால், தற்போது வரை தமிழக அரசு எந்தவொரு பதிலும் தரவில்லை.
நோட்டீஸ் வேண்டாம் என மாநில அரசின் உத்தரவாதம் அடிப்படையில், உத்தரவை மாற்றினோம். நீதிமன்றத்தின் முடிவை தமிழக அரசு மதிக்கவில்லை என்பதால், நோட்டீஸ் அனுப்புகிறோம்” என நீதிபதிகள் அபய் ஒகா மற்றும் ஏ.ஜி. மாஸி அமர்வு கோபமாக தெரிவித்தது.