பொய் வழக்கு புனைந்து சூர்யா சிவா கைது என புகார்… அமைச்சர் அன்பில் மகேஷ் அலுவலகம் முற்றுகை : பாஜகவினர் கைது.. திருச்சியில் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan25 June 2022, 2:11 pm
திருச்சி : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவை சேர்நத் நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
பாரதீய ஜனதா கட்சியின் மாநில OBC பொதுச்செயலாளர் சூர்யாசிவா திருச்சிக்கு பயணிகளுடன் வந்த ஆம்னி பேருந்தை கடத்திச் சென்றதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
இதைக் கண்டித்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து சத்திரம் பேருந்து அருகில் உள்ள காமராஜர் சிலை முன்பு மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் முற்றுகையிட முனைந்தனர்.
இதனால் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அலுவலகம் முற்றுகை காரணமாக மாநகர காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி தலைமையில் அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டிருந்தனர்.