16 மணி நேரம் வேலை… ஊக்கத் தொகையும் இல்ல : இதுல பெட்ரோல் செலவு வேற… 2வது நாளாக ஸ்விக்கி ஊழியர்கள் போர்க்கொடி!!
Author: Udayachandran RadhaKrishnan20 September 2022, 1:57 pm
ஸ்விகியில் பணிபுரிபவர்களுக்கு வாரம் ஒரு முறை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தற்போது ஸ்விகியின் புதிய நடைமுறையில் இது போன்ற ஊக்கத்தொகைகள் முழுவதுமாக தவிர்க்கப்படுவதாகவும் வேலை பார்க்கும் நேரம் 12 மணி நேரத்தில் இருந்து 16 மணி நேரம் வரை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே இருந்த வேலை நேரப்படி 12 மணி நேரம் வேலை செய்தால் வாரம் ரூ.14500 வரை சம்பளம் கொடுக்கப்பட்டது. ஆனால் புதிய நடைமுறைப்படி தற்போது 16 மணி நேரம் வேலை செய்தால் கூட 12000 ஆயிரம் ரூபையை தான் பெற முடிகிறது.
இதில் ஊழியர்களுக்கான பெட்ரோல் செலவு, உணவு செலவு, வாகன செலவு போக வரம் 7 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக கிடைக்கும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் புதிய விதிகளின் படி எவ்வளவு வேலை பார்த்தாலும் குறிப்பிட்ட அளவு மட்டுமே சம்பளம் வழங்கபட உள்ளதாகவும் ,மேலும் பழைய நடைமுறையின்படி ஊக்க தொகை மற்றும் சம்பளத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து ஸ்விகி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுவருக்கின்றனர்.
இது குறித்து ஊழியர்கள் கூறியதாவது : சென்னையில் ஸ்விகி உணவு விநியோகம் செய்யும் பகுதிகள் மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட மண்டலங்களில் இந்த புதிய நடைமுறை அமலுக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்த அவர்கள், மீதமுள்ள மண்டலங்களிலும் புதிய சம்பள நடைமுறையை கொண்டு வருவார்கள் எனவும் தெரிவித்தனர்.
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய விதிமுறைகளின் படி தங்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதாகவும் வருமானம் குறைவதாகவும் வருத்தம் தெரிவித்தனர்.
முன்பு வழங்கப்பட்டது போலவே வார ஊக்கத் தொகையை வழங்கும் வரை தாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.