ஆப்ரிக்க பன்றி காய்ச்சலுக்கு பன்றி உயிரிழப்பு.. ஒரு கி.மீட்டருக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு ; நாமக்கல்லில் அதிர்ச்சி..!!
Author: Babu Lakshmanan25 March 2023, 11:12 am
ராசிபுரம் அருகே தனியார் பன்றி பண்ணையில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலால் பன்றி உயிரிழந்ததால், சுமார் ஒரு கிலோமீட்டர் வரை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் பண்ணைகள் அமைத்து பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ராசிபுரம் அருகே உள்ள போதமலை அடிவாரப் பகுதியில் கல்லாங்குளம் பகுதியில் தனியார் பன்றி பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு போதமலையில் இருந்து பன்றி ஒன்று பண்ணையில் அருகே இறந்து கிடந்துள்ளது. இது பற்றி பன்றியின் உரிமையாளர் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலின் பெயரில் அங்கு சென்ற மாவட்ட வனத்துறை மற்றும் மருத்துவ குழுவினர் இறந்து கிடந்த பன்றியின் உடலை கைப்பற்றி ஆய்வுக்காக சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு பன்றியை பரிசோதித்த மருத்துவர்கள் பன்றிக்கு ஆப்பிரிக்க காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இறந்து கிடந்த பண்ணையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பன்றிகளை கொள்ள மாவட்ட வனத்துறையினர் மற்றும் கால்நடை துறையினர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் கண்டறியப்பட்டதை தொடர்ந்து பண்ணையை சுற்றி ஒரு கிலோ மீட்டர் வரை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார். தற்போது அப்பகுதியில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலால் 20க்கும் மேற்பட்ட பன்றிகளை கொள்ள உத்தரவிட்ட நிலையில் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.