காலையில் கைதான மோகன் ஜி மாலையில் விடுதலை : சட்டவிரோதம் என நீதிபதி காட்டம்!
Author: Udayachandran RadhaKrishnan24 September 2024, 7:50 pm
திருப்பதி லட்டு பிரசாதம் விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையாகி வரும் நிலையில் அது குறித்து சமூகவலைதளங்களில் பெரும் விவாதமே எழுந்தது.
லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யில், பன்றிக் கொழுப்பு, மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய திரௌபதி பட இயக்குநர் மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், எப்படி மனசாட்சி துளி கூட இல்லாம இத்தனை கோடி மக்கள் நம்பிக்கையில் விளையாடி இருக்கீங்க.. வைணவ முத்திரை வாங்கியவர்கள் எத்தனை லட்சம் பேர் புனிதமாக வாழ்ந்து வருகிறார்கள்.. கொடுரமான தண்டனை வழங்க வேண்டும் இதை செய்த கொடிய மிருகங்களுக்கு.. இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள். என பதிவிட்டிருந்தார்.
அதே போல தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலப்பதாக கூறியிருந்தார். இந்த சர்ச்சை கருத்துக்காக அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
சென்னை காசிமேட்டில் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்படுள்ளதாக கூறப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர் படுத்தியபோது வழக்குபதிவு செய்தது சரிய, ஆனால் அவரை கைது செய்தது சட்டவிரோதம் என கூறி நீதிமன்றம் அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தது.