தமிழக பட்ஜெட்டில் வந்த அறிவிப்பு…சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் : எதுக்கு தெரியுமா?

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2022, 3:23 pm

விழுப்புரம் : விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதால் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

விழுப்புரம் மாவட்டம் தொன்மைச் சிறப்பு வாய்ந்த மாவட்டம் ஆகும். இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட திருவக்கரை கல்மரங்கள், பழமைவாய்ந்த கல்வெட்டுகள், நடுகற்கள், செப்பேடுகள், பாறை ஓவியங்கள், ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட ஏராளமான வரலாற்றுத் தடயங்கள் இந்த மாவட்டத்தில் கிடைத்துள்ளன, கிடைத்தும் வருகின்றன.

இவற்றைப் பாதுகாக்கவும் வருங்கால சந்ததியினருக்கு காட்சிப்படுத்தவும் அரசின் சார்பில் மாவட்டத் தலைநகரான விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பது இம்மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும்.

இதற்காக எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் தலைமையில் அருங்காட்சியகம் அமைப்பு கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இக்கூட்டமைப்பு சார்பில் கையெழுத்து இயக்கம், மக்கள் சந்திப்பு இயக்கம், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளைச் சந்திப்பது போன்ற தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மேலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்.தென்னரசு அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அருங்காட்சியகம் அமைப்பு கூட்டமைப்பினர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதுபற்றி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது : விழுப்புரத்தில் அருங்காட்சியகம் என்பது எங்களது நீண்ட நாளைய கனவு. அது இன்று நனவாகி இருக்கிறது. இதற்கானத் தொடர் முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது. உள்ளபடியே எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு தொல்லியல் துறை அமைச்சர், மதிப்பிற்குரிய அருங்காட்சியகங்கள் துறை இயக்குனர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு எங்களது நன்றி.

அருங்காட்சியகம் என்பது கடந்த கால மனித குல வரலாற்றை நிகழ்கால மற்றும் எதிர்காலச் சந்ததியினருக்கு எடுத்துச் சொல்லும் அரிய சாதனம். விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் இதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கானப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1293

    0

    0