தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு : 2009 முதல் 2014ம் ஆண்டு வரை சிறந்த நடிகர், படம், இயக்குநர்கள் தேர்வு…!!
Author: Udayachandran RadhaKrishnan2 September 2022, 2:20 pm
2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுவரை 6 ஆண்டுகளுக்கான சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் 2009 முதல் 2014 ஆம் ஆண்டுகள் வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூபாய் 1 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.75 ஆயிரம், சிறந்த படத்திற்கான சிறப்புப் பரிசு ரூ.75 ஆயிரம் என 23 தயாரிப்பாளர்களுக்கு 26 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும், சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் என 160 பேருக்குத் தலா 5 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.
சின்னத்திரை விருதுகள் 2009 ஆண்டு முதல் 2013 ஆண்டுகள் வரை சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் ஆண்டின் சிறந்த வாழ்நாள் சாதனையாளர்களுக்குத் தலா ரூ. 1 லட்சம் என 20 பேருக்கு ரூ. 25 லட்சத்திற்கான காசோலையும், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 81 பேருக்கு 3 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.