ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மீண்டும் செக்… கூடுதல் மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசு மும்முரம் : நாளை வெளியாகும் முக்கிய உத்தரவு!
Author: Udayachandran RadhaKrishnan12 December 2023, 10:02 pm
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மீண்டும் செக்… கூடுதல் மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசு மும்முரம் : நாளை வெளியாகும் முக்கிய உத்தரவு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார். இதனைத் தொடர்ந்து சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தப்பட்டு ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. மேலும் அந்த மசோதாக்கள் மீண்டும் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு கடந்த நவ.18ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்தார். இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆளுநர், காலத்தை வீணடிப்பதற்காகவே இவ்வாறான காரியங்களில் ஈடுபடுகிறார் என திமுகவினர் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் நாளை ஆளுநருக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், கடந்த நவம்பர் 18ஆம் தேதி சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்களை, ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இந்த கூடுதல் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.