பெண்ணுரிமைக்கு முன்னுரிமை தந்து நாட்டிற்கே முன்னோடி மாநிலமாக உள்ளது தமிழகம் : பாரதியார் பல்கலை., மாநாட்டில் முதலமைச்சர் பெருமிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2022, 1:07 pm

கோவை : பெண்ணுரிமைக்கு முன்னுரிமை தந்து நாட்டிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருவதாக பாரதியார் பல்கலைக் கழக மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தென்னக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் தமிழக ஆளுநர் என்.ஆர்.ரவி கலந்துகொண்டுள்ளார். மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.

மாநாட்டில் அவர் பேசியதாவது : தேசிய அளவிலான தரவரிசைப்பட்டியலில், தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் முதலிடம் பெற்று மாநிலத்துக்கே முன்னோடியாகத் திகழ்கின்ற பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து இந்தியப் பல்கலைக்கழகக் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் இந்த மாநாடு ஆக்கப்பூர்வமானதாக அமைய வேண்டும்.

இந்த மாநாட்டின் மையப் பொருளாக உயர்கல்வி நிறுவனங்கள் மூலம் ஒருங்கிணைந்த, சமமான மற்றும் தரமான கல்வியினை நடைமுறைப்படுத்துதலின் அவசியம்’ என்கிற ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறைகூவல் அமைந்துள்ளது நாட்டின் நிலையான நீடித்த வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் என நம்புகிறேன்.

இந்த அடிப்படையில்தான் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் தரமான உயர்கல்வி வழங்குவதில் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்கிறது. அறிவுப்பூர்வமான அறிவியல்சார்ந்த உண்மைகளை மட்டுமே பல்கலைக்கழகங்கள் ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஆகவே தான், தென்னகத்தைச் சார்ந்த ஆறு மாநிலங்களின் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் இருக்கக்கூடிய இந்த அவையில், தமிழ்நாடு உயர்கல்வியில் சிறந்து விளங்குகிறது என்பதை தெரிவிப்பதற்குப் பெருமையாக இருக்கிறது.

இத்தகைய பெருமையினையும் புகழையும் பெற்றுத் தந்துள்ள தமிழக அரசின் உயர்கல்வித்துறை மற்றும் தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களை நெஞ்சாரப் பாராட்டுகிறேன்.

2020-21-ஆம் ஆண்டுக்கான தேசிய நிறுவனங்களுக்கான தரவரிசை கட்டமைப்பில் அனைத்து இந்திய அளவில் தமிழ்நாட்டின் 19 பல்கலைக்கழகங்கள் மற்றும் 33 கல்லூரிகள் முதல் நூறு இடங்களுக்குள் உள்ளன.

சென்னையிலுள்ள லயோலா கல்லூரி அனைத்து இந்திய அளவில் மூன்றாவது இடமும் பெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கின்றன.

பள்ளிக் கல்வி முடித்து, உயர்கல்விக்கு பயிலவரும் மாணவர்களின் சேர்க்கை விகிதம், தேசிய அளவில் 27.1 விழுக்காடு, ஆனால், தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கை விகிதம் 51.4 விழுக்காடு என்ற அளவுக்கு மிக உயர்ந்திருக்கிறது.

தமிழ்நாட்டின் மாணவர் சேர்க்கை விகிதம் தேசிய அளவிலான சராசரியை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது உயர்கல்வியில் தமிழ்நாடு நிகழ்த்தியுள்ள சாதனை. அதுமட்டுமல்ல, 17 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகிறது.

தமிழ்நாட்டில் 1,553 கல்லூரிகள் 52 அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், 1,096 தொழிற்கல்வி நிறுவனங்கள் உயர்கல்வி அளித்து தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்குத் துணை நிற்கின்றன.

தொழிற்கல்வியிலும்மருத்துவக் கல்லூரியிலும் மாணவர் சேர்க்கையில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்து, சாதாரண நிலையில் உள்ளவர்களும் சிறந்த நிலைக்கு உயர வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

அதோடு, தொழிற்கல்வி மற்றும் மருத்துவப் படிப்பில் சேர “நுழைவுத்தேர்வு” கட்டாயம் என்பதை ஒழித்துக்கட்டி, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பெரும் அளவில் மேற்படிப்பில் இடம் கிடைக்கச் செய்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

பெண்ணடிமைத்தனத்தை ஒழித்துப் பெண்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் விடுதலை பெற்றவர்களாகத் திகழ வேண்டும் என்பதே திராவிட இயக்க வழி வந்த நமது கொள்கை.

அந்த விடுதலையை அடைவதற்கு கல்வியே திறவுகோல். ஆகவே, பெண் கல்வியிலும் தமிழ்நாடு அரசு பெண்களுக்கென்று தனிக் கல்லூரிகள், இருபாலர் கல்லூரிக்கு அனுமதி, பெண்களுக்கென்று தனிப் பல்கலைக்கழகம், இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் படிப்பில் பணிகளுக்கு தேர்ச்சி பெற பயிற்சி தரும் மையங்கள், வேலைவாய்ப்பிற்கான கணினிப் பயிற்சி, முனைவர் ஆராய்ச்சிப் படிப்பிற்கான உதவித்தொகை போன்ற மாணவியர்களுக்கான பெண்ணுரிமைக்கு முன்னுரிமை தந்து நாட்டிற்கே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.

மாநிலத்தில் உயர்கல்வி சென்றடையாத பகுதிகளுக்கும் அடுத்த பத்தாண்டுகளில் அரசால் விரிவுப்படுத்தப்பட உள்ளது. உயர்கல்வித் துறைக்கு 5,369 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

தாய்மொழிக் கல்வியினை மேம்படுத்தும் பொருட்டு, தொடக்கத்தில் நான்கு பொறியியல் கல்லூரிகளில் இளநிலை வகுப்புகள் தமிழில் நடப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, தொழிற்கல்வியிலுள்ள பாடநூல்களைத் தமிழில் மொழிமாற்றம் செய்ய 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் அவர் பேசினார்

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 1071

    0

    0