தமிழகமே காய்ச்சலால் தவிக்குது… முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்க தமிழக அரசே : அண்ணாமலை வலியுறுத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 September 2022, 11:02 am

தமிழகத்தில் தற்போது இன்ஃப்ளுயன்சா என்ற புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. மருத்துவமனைகளில் ஏராளமான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார். திடீர் வறட்டு இருமல், தொண்டை வலி, தலைவலி, மூக்கடைப்பு, உடல் வலி, உடல் சோர்வு ஆகியவை இன்ஃப்ளுயன்சா காய்ச்சலின் அறிகுறிகள் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் எச்1என்1 இன்ஃப்ளுயன்சா வைரஸ் பரவல் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- எச்1என்1 இன்ஃப்ளுவன்சா வைரஸ் பரவல் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

சென்னையில் பல மருத்துவமனைகளில் காய்ச்சலுடன் சிகிச்சைக்காக வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. எச்1என்1 இன்ஃப்ளுயன்சா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பள்ளிக் கல்வித்துறை மற்றும் அரசு மருத்துவர்களின் உதவியோடு மாணவர்கள் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்க வேண்டும்.

எச்1என் இன்ஃப்ளுயன்சா வைரஸ் பரவல் குறையும் வரை பொது இடங்களில் முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும். நோய் பரவலைத் தடுப்பதற்கு மக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பைத் தர வேண்டுமென்று பாஜக சார்பாக பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ