இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடம் .. அமைச்சர் பிடிஆர் பரபரப்பு பேச்சு… அதிர்ந்து போன மொத்தக் கூட்டம்!!!
Author: Udayachandran RadhaKrishnan10 December 2023, 12:17 pm
இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடம் .. அமைச்சர் பிடிஆர் பரபரப்பு பேச்சு… அதிர்ந்து போன மொத்தக் கூட்டம்!!!
‘ஆரம்பச் சுகாதார பராமரிப்புக்கு நிதியளிப்பது மற்றும் ஆரம்பச் சுகாதாரத் துறையில் தொழில்நுட்பத்தை எப்படித் திறம்படப் பயன்படுத்த வேண்டும் என்ற தலைப்பில் அமைச்சர் பிடிஆர் பேசினார்
அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பிடிஆர், “மருத்துவக் கல்வியில் நாட்டிலேயே தமிழ்நாடு தான் சிறந்து விளங்குகிறது.. நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும் போது, மருத்துவர்- நோயாளி விகிதத்தில் தமிழ்நாட்டில் தான் மிகவும் சிறப்பாக இருக்கிறது.
அதேநேரம் இன்னும் நாம் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும். முன்னேற்றத்திற்கான இடமும் இருக்கவே செய்கிறது. சமூக நீதி மற்றும் கல்வியில் சமமான அணுகல் ஆகியவற்றை உறுதி செய்துள்ளோம். இதுதான் தமிழ்நாடு அடுத்த கட்டத்திற்குச் செல்வதை உறுதி செய்துள்ளது. கல்விக்குப் பிறகு, தமிழ்நாடு சுகாதாரத்துக்கே அதிக செலவு செய்கிறது.. தமிழ்நாடு ஒரு நல்ல ஆரம்பச் சுகாதார கட்டமைப்பைக் கொண்டு இருக்கிறது.
ஆனாலும், இன்னும் சில முன்னேற்றங்களைச் செய்யலாம்,. தடைகள்: கொரோனா பரவல் சமயத்தில் நம்மிடம் சில தடைகள், சில பின்னடைவுகள் இருப்பதை உணர்ந்தோம். நமது முழு திறன் பயன்படுத்துவதில் ஏதோ சிறிய சிக்கல் இருப்பதை உணர்ந்தோம். உதாரணத்திற்கு, கொரோனா சமயத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கூட்ட நெரிசல் அதிகமாகி, அதுவே கொரோனா பரவ காரணமாக அமைந்துவிடும் என்ற சூழல் உருவானது.
இதையடுத்து உள்ளூர் சுயஉதவிக் குழுக்களைப் பெற்றோம். சுமார் 4,000 பெண்களைக் கொண்ட குழு வீடு வீடாகச் சென்று, குறிப்பாகக் கிராமங்களில், மக்களுக்கு அறிகுறிகளைப் பரிசோதித்தனர்.
ஒவ்வொரு பஞ்சாயத்து நிலையிலும், ஆக்ஸிஜன், மருந்து மற்றும் செவிலியர்களுடன் ஐந்து முதல் 10 படுக்கைகள் வரை வசதிகள் அமைக்கப்பட்டன. இப்படி ஆங்காங்கே சிகிச்சை தர நடவடிக்கை எடுத்தோம். அதன் பிறகே ராஜாஜி மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைத்தது. அடுத்து சோதனை செய்வதிலும் காலதாமதம் ஏற்பட்டது. சோதனை மையங்கள் போதுமான அளவு இருந்தாலும் சோதனை இயந்திரங்கள் குறைவாகவே இருந்தது. சிஎஸ்ஆர் நிதி மூலம் அதை அதிகரித்தோம்.
பொதுச் சுகாதாரத்தில் கட்டமைப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றுடன் தரமான மருத்துவம் அனைத்து தரப்பினருக்கும் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். மூன்றாம் நிலை பராமரிப்பு மையங்களுக்கான தேவையான விஷயங்களைக் கொடுத்தோம்.
நோயாளிகளின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்கவும் அதைப் பரிசோதனை செய்யவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்தோம். இதுவே கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த உதவியது.
தற்போதைய சூழலில் நிதி, சுகாதாரம் என்ற எந்தவொரு துறையாக இருந்தாலும் முதலில் நாம் செய்ய வேண்டியது தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது தான். நாம் பணத்தைச் செலவழிக்கும் திறனை மேம்படுத்த வேண்டும், வளங்களை ஒதுக்குவது மற்றும் அரசின் வளங்களை மக்கள் அணுகுவதை எளிதாக்குவது போன்ற முடிவுகளைச் சரியாக எடுக்க வேண்டும்” என்றார்.