திம்பத்தில் திரும்ப முடியால் திணறிய லாரி : தமிழகம் – கர்நாடகா இடையே போக்குவரத்து கடும் பாதிப்பு..வாகன ஓட்டிகள் அவதி!!
Author: Udayachandran RadhaKrishnan26 April 2022, 2:14 pm
ஈரோடு : திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரியால், இரு மாநிலங்களுக்கிடையே இரண்டு மணிநேரமாக போக்குவரத்து பாதிப்படைந்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.
தமிழகம்- கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்தாக உள்ள இந்த பாதையில், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இரவு நேரத்தில் சாலையை கடக்கும் வனவிலங்குகள் வாகனத்தில் மோதி உயிரிழப்பதாக கடந்த பிப்ரவரி 10-ம் தேதி முதல், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர போங்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை 7.00 மணியளவில், கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று, திம்பம் மலைப்பாதை 9-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது குறுகிய வளைவில் திரும்ப முடியாமல் நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிறிய வாகனங்கள் மட்டுமே சென்று வந்தன. மற்ற வாகனங்கள் ஏதும் செல்ல முடியவில்லை. லாரியை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் திம்பம் மலைப்பாதையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
0
0