தமிழகத்திற்கு சமூக நீதி தேவைப்பட்டது, தேவைப்படுகிறது : குமரகுரு கல்லூரி விழாவில் டி.வி.எஸ் நிறுவன தலைவர் வேணு சீனிவாசன் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
21 March 2022, 9:06 pm

கோவை : முந்தைய காலகட்டத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக இருந்ததால் சமூகநீதி தேவைப்பட்டதாக டி.வி.எஸ் குழுமங்களின் தலைவர் வேணு சீனிவாசன் கோவை குமரகுரு கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பேசியுள்ளார்.

குமரகுரு கல்வி நிறுவனங்களின் நிறுவன நாள் விழா இன்று சரவணம்பட்டி உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக டி.வி.எஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன் கலந்து கொண்டார்.

குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் வேணு சீனிவாசனுக்கு அருட் செல்வர் நா.மகாலிங்கம் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. தொடர்ந்து ரூ.10 கோடி மதிப்பில் க்ரியா என்ற ஆய்வு அமைப்பு துவங்கப்பட்டது.

இந்த விழாவில் டி.வி.எஸ் குழுமங்களின் தலைவர் வேணு சீனிவாசன் பேசியதாவது : சனாதான தர்மம் என்பது மக்களை பிரித்தாள்வதற்காக அல்ல. அனைத்து மதமும், சாதியும் ஒன்றுதான். நான் சிறுவனாக இருந்த போது சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக இருந்தது. இதனால் சீர் திருத்தம் தேவைப்பட்டது. சமூக நீதி தேவைப்பட்டது. அப்போது நா.மகாலிங்கம் போன்றவர்கள் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய சேவை செய்தனர். இவர்களை போன்றவர்களால் தான் தமிழகம் இன்று சிறப்பாக உள்ளது.

தொழில் மட்டும் செய்யாமல் மக்களுக்கான சேவையை செய்ய வேண்டும் என்பதையும், மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை நான் உணர்ந்துள்ளேன். மாணவர்கள் பட்டம் பெற்றதுடன் கல்வி முடிந்துவிடுவதல்ல. புதிய புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு உங்களை புதுப்பித்துக் கொண்டே இருங்கள். இல்லையென்றால் தேய்ந்து, மதிப்பில்லாத சூழல் உருவாகிவிடும்.

ஆசிரியர்களின் தியாகத்தால் உருவானவர்கள் தான் மாணவர்கள். வாழ்வில் எந்த நிலைக்கு சென்றாலும் ஆசிரியர்களை மறந்துவிட வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில், பிரிக்கால் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் மோகன், ரூட்ஸ் தலைவர் ராமசாமி கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1242

    0

    0