“இந்த ஆட்டம் போதுமா? கொழந்த” : தமிழக ஊர்தி அணிவகுப்பு… பாஜகவை வம்புக்கு இழுத்த திமுக.. சர்ச்சையான போஸ்டரால் பரபரப்பு.!
Author: Udayachandran RadhaKrishnan26 January 2022, 11:00 am
கோவை : குடியரசு தினவிழாவை முன்னிட்டு டெல்லியில் தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்ட நிலையில் சென்னை விழாவில் அணிவகுப்பு காட்சி நடத்தப்பட்ட நிலையில் “இந்த ஆட்டம் போதுமா? கொழந்த” என்று திமுக.,வினர் கோவையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
இன்று 73வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் டெல்லில் நடைபெறும் மாநில வாகனங்கள் அணிவகுப்பில் தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடம் பரிசீலனை செய்ய கேட்டிருந்தார். ஆனால் இது உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருவதாகவும், இது முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்தது.
தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்தனர். இதையடுத்து வேலுநாச்சியார், பாரதியார், வ.உ.சி ஆகியோரின் அலங்கார ஊர்தி சென்னை குடியரசு தினவிழாவில் காட்சிப்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதையடுத்து இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் சென்னையில் வாகன அணிவகுப்பு நடத்தப்பட்டது. அதில் டெல்லியில் நிராகரிக்கப்பட்ட தமிழக ஊர்தி காட்சிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் கோவை மாநகரில் லங்கா கார்னர், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் “இந்த ஆட்டம் போதுமா? கொழந்த…” என திமுக வினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
கோவை மாநகர் கிழக்கு மண்டலம் பெரிய கடை வீதி சார்பில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டரில் சிதம்பரனார், வேலு நாச்சியார், பாரதியார், மருது சகோதரர்கள், பெரியார் ஆகியோரின் புகைப்படங்களும், அமைச்சர்கள் அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி, முதலமைச்சர் முக.ஸ்டாலின், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்தி சென்னையில் அணிவகுத்ததை கொண்டாடிய திமுகவினர் போஸ்டர் அடித்துள்ளது தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.