கோவை தண்டுமாரியம்மனுக்கு 21 வகை பழங்களால் சிறப்பு அலங்காரம் ; தமிழ்ப் புத்தாண்டையொட்டி கோவில்களில் விஷேச வழிபாடு..!!

Author: Babu Lakshmanan
14 April 2023, 12:09 pm

கோவை ; கொரோனா நீங்க வேண்டி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தண்டுமாரியம்மனுக்கு 21 வகை பழங்களால் சிறப்பு அலங்கார சிறப்பு பூஜை நடைபெற்றது.

இன்று தமிழ்புத்தாண்டு (சித்திரைக்கனி) கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் புத்தாண்டு முன்னிட்டு அனைவரது இல்லங்களிலும் பழங்கள் வைத்து வழிபாடு செய்த பின்னர் பொதுமக்கள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.கோவையில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவே காணப்படுகிறது.

இந்நிலையில் கோவையில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கும், அருள்மிகு தண்டுமாரியம்மன் கோவில் பக்தர்கள் அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சித்திரைக்கனியை முன்னிட்டு தண்டுமாரியம்மனுக்கு 21 வகை பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் நடை முழுவதும் பழத்தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அம்மனுக்கு அதிகாலை முதலே தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில், கொரோனா தொற்று நீங்கவும், மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும், சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன.

இதேபோல, கோவை காட்டூர் பகுதியிலுள்ள முத்து மாரியம்மன் திருக்கோவிலில் 83வது சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கோவிலில் சித்திரை முதல்நாளான இன்று 100, 200, 500, 2000 ரூபாய் நோட்டுக்கள் என சுமார் ரூ.6 கோடி மதிப்பிலான பணத்தை கொண்டும் தங்க, வைர ஆபரணங்களை கொண்டும் சிறப்பு அலங்காரம் செய்யபட்டு சிறப்பு பூஜை செய்யபட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

தமிழ்புத்தாண்டை முன்னிட்டு புலியகுளத்தில் உள்ள விநாயகர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

உலக புகழ் பெற்ற 19 அடி உயரம் 190 டன் எடை கொண்ட ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய முந்தி விநாயகர் சிலைக்கு சித்தரை கனியை முன்னிட்டு ஆப்பிள், ஆரஞ்சு, பலாப்பழம் அன்னாசி, வாழைத்தார், மாதுளை, கொய்யா என 2 டன் அளவிற்கு பழங்களை கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இங்கு வரும் பக்தர்கள் அருகம்புல்லை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

இதேபோல், கோவையிலுள்ள பல்வேறு கோவில்களிலும் சிறப்பு அலங்காரம், பூஜையுடன் வழிபாடு செய்து தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 436

    0

    0