8 மாதங்கள் கழித்து கொள்கை.. ஒரு வருடம் தாண்டி சிலை திறப்பு.. தவெகவின் அரசியல் நகர்வு!
Author: Hariharasudhan2 February 2025, 12:41 pm
தவெகவின் கொள்கைத் தலைவர்களின் சிலையைத் திறந்து வைத்து கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்கத்தை அதன் தலைவர் விஜய் கொண்டாடியுள்ளார்.
சென்னை: கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி, தனது அரசியல் கட்சி குறித்தான அதிகாரப்பூர்வ அறிப்பை வெளியிட்டார், தமிழ் சினிமாவின் உச்சக்கட்ட வணிக நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சியின் பெயரை அறிவித்து, உறுப்பினர் சேர்க்கைக்கான அறிவிப்பையும் விஜய் வெளியிட்டார்.
மேலும், தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தார். ஆனால், விஜய் தொடங்கிய தவெகவின் கொள்கை என்னவென்று அரசியல் விமர்சகர்களும் அரசியல் கட்சியினரும் கேள்வி எழுப்பி வந்தனர். முக்கியமாக, கொள்கையில்லா அரசியல் கட்சி என்ற விமர்சனங்களுக்கும் தவெக உள்ளானது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் கட்-அவுட்களை இடம் பெறச் செய்து தனது அரசியல் கொள்கைகளை முன்கூட்டியே தெரியப்படுத்தினார்.
மேலும், தனது அரசியல் எதிரியாக திமுகவையும், கொள்கை எதிரியாக பாஜகவையும் வெளிப்படையாக அறிவித்தார். இதனையடுத்து, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை, ஆளுநரைச் சந்தித்து சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக்கு நேரில் சென்று பேச்சு என அரசியல் முன்னெடுப்புகளையும் கையிலெடுத்தார்.
இந்த நிலையில், கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், நிர்வாக வசதிகளுக்காக 120 மாவட்டங்களாகப் பிரித்தார். தொடர்ந்து, பல்வேறு கட்டங்களாக கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார்.
இதையும் படிங்க: 1967, 1977 அரசியல் அதிர்வு.. 2026 தேர்தலே இலக்கு.. தொண்டர்களுக்கு விஜய் உணர்ச்சிகர கடிதம்!
இதனிடையே, மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களான ஆதவ் அர்ஜூனா, சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். அவர்களுக்கு, தலைமைக் கழக பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று ஓராண்டை நிறைவு செய்துள்ளது தமிழக வெற்றிக் கழகம்.
இதனையொட்டி, சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகம் வந்த விஜய், கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, தவெகவின் கொள்கைத் தலைவர்களான பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரது சிலைகளுக்குத் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.