விநாயகருக்கு நோ.. அம்மனை அழைத்த விஜய்!

Author: Hariharasudhan
11 October 2024, 10:56 am

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத தவெக தலைவர் விஜய், தற்போது ஆயுத பூஜைக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

சென்னை: அக்டோபர் 27, 2024 என்ற நாளை விஜய் ரசிகர்கள், தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். காரணம், அன்றைய தினம், தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் விஜய், தான் ஆரம்பித்த கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்த இருக்கிறார். கட்சி தொடங்கி கிட்டத்தட்ட 8 மாதங்களுக்குப் பிறகு இந்த மாநாடு நடைபெற உள்ளது.

இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை அக்கட்சியின் பொதுச் செயலாளார் புஸ்ஸி என்.ஆனந்த் மேற்கொண்டு வருகிறார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, முதல் மாநாடு, முதல் அரசியல் மேடைப் பேச்சு என எதனையும் சொதப்பாமல் செய்ய வேண்டும் என மீண்டும் மீண்டும் கட்சியின் சார்பில் தவெக நிர்வாகிகளுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அது மட்டுமல்லாமல், இந்த மேடையில் தான் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், தவெக பாடலின் பொருள், கட்சிக் கொடிக்கான விளக்கம் ஆகியவற்றைக் கூற உள்ளார். எனவே தான் இந்த மாநாட்டின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், திராவிடக் கட்சிகளின் சாயலில் விஜய் செல்கிறார் எனவும் ஒரு பேச்சு உள்ளது. இதற்குச் சான்றாக, சமீபத்தில் பெரியார் பிறந்தநாள் அன்று, சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது சிலைக்கு நேரில் மரியாதை செலுத்தினார் விஜய்.

இதனிடையே, பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லவும் தொடங்கினார். ஆனால், வட மாநிலங்களில் பெரிதும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து கூறவில்லை. இது அப்போது பேசுபொருளானது. இந்துத்துவா அமைப்புகள், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோர் மீண்டும் ‘ஜோசப் விஜய்’ என்ற வார்த்தையைத் தூக்கினர். மேலும், திமுகவின் பி டீம் என்றும், கமல்ஹாசனைப் போன்று இறுதியில் திமுக உடனே தவெக சேரும் எனவும் கருத்து தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சிதம்பரம் கோவிலை கைப்பற்ற நினைத்தால் மிகப்பெரிய போராட்டம் : ஹெச் ராஜா எச்சரிக்கை!!

அதற்கு ஏற்றார்போன்றே, விஜயின் அரசியல் வருகையை வரவேற்பதாகவே திமுகவினர் கூறி வருகின்றனர். அதேநேரம், திமுக கூட்டணியில் உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் போன்றோர், நீட் எதிர்ப்பு, மாநிலக் கல்விக் கொள்கை உள்ளிட்டவற்றை விஜய் பேசி வருவதால், தனிக்கட்சி எதற்கு, காங்கிரஸிலே இணைந்து விடலாம் எனவும் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் தான், விஜய் ஆயுத பூஜை வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதாரமாக விளங்கும் தொழில் கருவிகளையும், பயன்படுத்தும் வாகனங்களையும், அறிவைப் போதிக்கும் புத்தகங்களையும் வணங்கி வழிபடுவோம். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய திருநாள்களில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து புதிய முயற்சிகளும் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். இவ்வாறு விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய், ஆயுத பூஜைக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது அரசியல் மேடையில் பேசுபொருளாக மாறியுள்ளது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 142

    0

    0