விஜயின் வியாபாரத்துக்கு மட்டும் அது தேவையா? சுற்றி வளைக்கும் பாஜக!
Author: Hariharasudhan17 February 2025, 12:17 pm
மும்மொழிக் கொள்கை பற்றி பேசுவதென்றால், தனது படங்களை தமிழில் மட்டும்தான் வெளியிடுவேன் என விஜய் கூற வேண்டும் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: மும்மொழிக் கொள்கை குறித்து எல்லாம் நடிகர் விஜய் கருத்து சொல்லக்கூடாது; அப்படி சொல்வது என்றால், தனது படங்களை தமிழில் மட்டும்தான் வெளியிடுவேன் என விஜய் முதலில் சொல்ல வேண்டும்” என சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
அதேபோல், “தவெக தலைவர் விஜயின் பிள்ளைகள் எங்கு படிக்கிறது? சமச்சீர் பள்ளியிலா?, மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை மட்டும் வேறு மொழி படிக்காதே என்கிறார்கள்” என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கெல்லாம், காரணம், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பதால் 2 ஆயிரத்து 152 கோடி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடம் இல்லை. தமிழ்நாடு அரசு, இந்திய அரசமைப்புக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்” என உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்வுக்கு இடையே செய்தியாளர்களிடம் கூறினார்.

இதனால், தமிழகத்தில் உள்ள கட்சிகள், இதனை எதிர்த்து கருத்துகளைக் கூறி வருகின்றனர். அந்த வகையில் தான், நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், “மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?” எனக் கேள்வி எழுப்பி, “மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே” என விஜய், தனது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில், “நடிகர் விஜயின் திரைப்படம் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கூட வெளியாகிறது. உங்கள் வியாபாரத்திற்கு மட்டும் மும்மொழிக் கொள்கை தேவை. ஆனால், மாணவர்கள் மூன்று மொழிகளைக் கற்றுக் கொள்ளக் கூடாதா?” என தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதையும் படிங்க: விஜய்க்கு ஒரு கேள்வி.. கடுப்பான எச்.ராஜா!
மேலும், “பாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்” என விஜய் மாநில அரசையும் பாசிசப் புள்ளியில் நிறுத்தியுள்ளது அரசியல் மேடையில் கவனம் பெற்றுள்ளது.
ஆனால், ஏற்கனவே, 10, 12ஆம் வகுப்புகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் நிகழ்விலே, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என விஜய் வலியுறுத்தியதும், பாஜக பாசிசம் எனில், நீங்கள் என்ன பாயாசமா? என திமுகவுக்கு நேரடியாக விஜய் கேள்வி எழுப்பியதும், தற்போது தொடர்வதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.