கனிமொழி கேள்விக்கு திமுக பதில் கூற முடியுமா? தடம் மாறிய தமிழிசை!
Author: Hariharasudhan22 March 2025, 2:46 pm
காவிரி பிரச்னைக்கு டிகே சிவகுமாரை அழைத்து வந்து ஆலோசனை நடத்துவீர்களா என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிரான கூட்டத்தில் பங்கேற்றுள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைக் கண்டித்தும் பாஜக தரப்பில் இன்று கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தனது வீட்டின் முன்பு கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் அதிக கொலைகள் நடைபெறுகின்றன. நெல்லையில் மட்டும் 46 கொலைகள் நடந்திருக்கிறது. ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி வீடியோ போடுகிறார், ‘என்னுடைய உயிருக்கு பாதுகாப்பு இல்லை’ என்று.. அடுத்தநாளே அவர் உயிர் பறிக்கப்படுகிறது.
என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்? ஆனால், ரொம்ப இலகுவாக சொல்கிறார்கள், தனிப்பட்ட பிரச்னைக்கு நடக்கும் கொலைகளை எல்லாம் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது எனச் சொல்லி, எவ்வளவு தவறாக இவர்கள் நடந்து கொள்கிறார்கள். எனவே, இன்று தமிழக மக்களின் நலன் காப்பதற்காகவே நாங்கள் இந்த கருப்புக் கொடி போராட்டத்தை நடத்தி வருகிறோம்.
இதேபோல், ஒரு கருப்பு கொடியை வைத்துக் கொண்டு டாஸ்மாக்கை ஒழிப்போம் என உங்கள் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டீர்கள் அல்லவா? அதற்கு பதில் சொல்லுங்கள் இப்பொழுது. கனிமொழி சொன்னாரே, தமிழ்நாட்டில் விதவைகள் அதிகமாக இருக்கிறார்கள், ஏனென்றால் டாஸ்மாக் தான் காரணம் என்றார்கள்.
அதற்கு பதில் என்ன? தமிழ்நாட்டு மக்கள் நன்றாக ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழக மக்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன், பொதுமக்களே உங்கள் பிரச்னைகள் எவ்வளவோ தீர்க்கப்படாமல் உள்ளது. ஆனால், இல்லாத ஒரு அறிவிப்பை கையில் எடுத்துக் கொண்டு, இல்லாத ஒரு திணிப்பைக் கையில் எடுத்துக்கொண்டு இவர்கள் இன்று கூட்டம் நடத்துகிறார்கள். தமிழக மக்கள் திமுகவை மன்னிக்கவேமாட்டார்கள்.

காவிரி பிரச்னைக்கு இதேபோல கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரை அழைத்து கூட்டம் போட்டுவிடுவீர்களா? காவிரி பிரச்னை தீர்ந்துவிட்டதா? மேகதாது அருகில் அணை கட்டுவதாக அவர்கள் சொல்கிறார்கள். என்றாவது உங்களுடைய குழுவை கர்நாடகாவிற்கு அனுப்பி உள்ளீர்களா? கர்நாடகத் தலைவர்களை அழைத்து வந்து இங்கு கூட்டம் நடத்தினீர்களா?
இதையும் படிங்க: ஜனநாயகனை கைப்பற்றி ஜாக்பாட்.. பல கோடிகளுக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!
தமிழக விவசாயிகளே உங்களுக்கு கிடைக்க வேண்டிய காவிரியைப் பற்றி இவர்களுக்கு இங்கு அக்கறை இல்லை. முல்லைப் பெரியாறு பிரச்னை இன்னும் தீர்க்கப்படாத பிரச்னையாகவே இருக்கிறது. விவசாயிகள் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். தமிழக விவசாயிகளே இவர்களுக்கு உங்களைப் பற்றி கவலை இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
