‘ஒரு லட்சம் வாங்கிட்டு ரூ.20 ஆயிரம் தான் கொடுத்தாரு’… லஞ்சப் பணத்தை பிரிப்பதில் தகராறு… மின்வாரிய அதிகாரிகள் பேசும் ஆடியோ லீக்..!!

Author: Babu Lakshmanan
24 July 2023, 2:25 pm

திருச்சியில் மின்வாரிய அதிகாரிகள் லஞ்சம் பெறுவதும், பங்கீடும் குறித்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள் தயார் செய்வதற்கு பல தனியார் தொழிற்சாலை கொண்ட சிட்கோ (தொழிற்பேட்டை) துவாக்குடியில் இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலைகளுக்கு மின்விநியோகம் கொடுப்பது, டிரான்ஸ்பார்மர் அமைப்பது, ஒரு மின் திட்டத்திலிருந்து மற்றொரு மின்திட்டத்திற்கு மாற்றுவது போன்ற பல்வேறு பணிகளுக்காக தொழிற்சாலை உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு செல்லும் போது, மின்வாரிய அதிகாரிகள் தொழிற்சாலை உரிமையாளர்களிடம் கறாராக குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக வாங்கி வருகின்றனர். இதுகுறித்து தனியார் தொழிற்சாலையின் உரிமையாளர் ஒருவரும், துவாக்குடி மின்வாரிய AD காளிதாஸ் என்பவரும் உரையாடிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் மின்வாரிய AE பாஸ்கர் என்பவர் தொழிற்சாலை உரிமையாளரிடம் கறாராக பேசி லட்ச கணக்கில் லஞ்சமாக பெறுகிறார் என்றும், அந்தத் தொகையை உயரதிகாரிகளுக்கு சரிசமமாக பங்கீடு செய்யாமல் குளறுபடி செய்கிறார். மேலும் AE பாஸ்கர் என்பவர் மின் நுகர்வோர்கள் மற்ற அதிகாரிகளை பார்க்க அனுமதிக்காமல் தானே பணம் பட்டுவாடா விவரங்களை கையாண்டு வருகிறார் என்றும் பேசியுள்ளனர்.

மேலும், இதில் ஒருவரிடம் ஒரு லட்ச ரூபாய் பெற்ற போது, அதில் ஏஇ பாஸ்கர் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே வாங்கியதாகவும், அதனை ஐந்தாயிரம் ரூபாய் வீதம் அதிகாரிகளுக்கு பிரித்துக் கொடுத்ததாகவும் பேசியுள்ளனர்.

ஒரு மின்வாரிய அதிகாரி லஞ்சம் பெறுவதையும், அந்த லஞ்சத்தை வாங்கியதையும் தாமாக ஒப்புக்கொண்டு பேசிய ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் வேளையில், இது தொடர்பாக மின்வாரிய உயரதிகாரிகள், லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆகியோர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது லஞ்சத்தை ஊக்குவிப்பது போல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?