தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க சட்டதிருத்தம் தேவை : காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் வலியுறுத்தல்
Author: Babu Lakshmanan29 April 2022, 2:27 pm
திருச்சி : தமிழக மீனவர்களை மற்ற நாட்டுகாரர்களால் கைது செய்யப்படுவதற்கு சட்டத்திருத்தம் தேவை என்று காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் வசந்த் அன்கோ 104வது கிளை திறப்பு விழா அண்ணாமலை நகர் கரூர் பைபாஸ் சாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வசந்த் அண்ட் கோ நிர்வாக இயக்குனர் தமிழ்ச்செல்வன், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர்
வசந்த்விஜய், வசந்தகுமார் ஆகியோர் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி புதிய கிளைகளை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் பேசியதாவது :- அப்பாவுடைய மறைவிற்குப் பிறகு அரசியல் ஈடுபட்டுள்ளதால் திரைப்படங்களில் நடிப்பதற்கு தற்காலிக இடைவெளி கொடுத்துள்ளேன். வாய்ப்பு வருகின்றது. ஆனால், தொகுதியை பார்ப்பதால் வாய்ப்பு கிடைக்கும்போது நடிப்பேன்.
நமது நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்கும் போது மற்ற நாட்டுகாரர்களால் சிறைப்பிடிக்கப்
படுகின்றனர். இதற்கான சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று பாராளுமன்றத்தில் வலியுறுத்தி உள்ளேன்.
தற்போது கன்னியாகுமாரி கடலோரங்களில் தடுப்புச்சுவர் தூண்டில் வளைவு உள்ளிட்ட பணிகளை வேகப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சரை பார்த்து கோரிக்கை விடுத்துள்ளேன். குளச்சல் துறைமுகம் விரிவாக்கம் மேலும் அதை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளேன்.
கன்னியாகுமரி பகுதிகளில் இடங்களை கண்டறிந்து அவற்றை சுற்றுலாத்தலமாக அறிவிக்க முயற்சி எடுத்து வருகிறேன் என தெரிவித்தார்.