என்னை தமிழக காவல்துறை கைது செய்ய போறாங்க.. ட்விட்டரில் பதிவிட்ட பாஜக பிரமுகர் : வைரலாகும் ட்வீட்!!
Author: Udayachandran RadhaKrishnan7 December 2022, 12:58 pm
என்னை 4 மணி நேரத்தில் தமிழக காவல்துறை கைது செய்ய போகிறார்கள் என பாஜக பிரமுகர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழக பாஜகவின் இளைஞர் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவராக இருப்பவர் அமர்பிரசாத் ரெட்டி. யூ டியூப் சேனல்களில் இடைவிடாமல் பேட்டி கொடுத்து வருபவர்.
திமுக அரசு மீதும் தமிழக அமைச்சர்கள் மீதும் சரமாரியான குற்றச்சாட்டுகளை பேட்டிகளில் சுமத்தி வருபவர் அமர் பிரசாத் ரெட்டி.
தமிழக பாஜகவில் உட்கட்சி மோதல்களில் அண்மையில் அமர் பிரசாரத் ரெட்டி, நடிகை காயத்ரிக்கு எதிராக ட்விட்டரில் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார்.
அதில், முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசனை சந்தித்தார். சுமார் 1 மணிநேரம் இந்த சந்திப்பு நடந்தது என காயத்ரி ரகுராம் பெயரை குறிப்பிடாமல் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த காயத்ரி ரகுராம், முட்டாள்தனமான கருத்து என சாடி இருந்தார். இதனைத் தொடர்ந்து பாஜகவில் இருந்து திருச்சி சூர்யா வெளியேறுவதாக அறிவித்தார்.
தாம் பாஜகவில் இருந்து வெளியேறுவதற்கு காரணமே அமர் பிரசாத் ரெட்டிதான் என ட்விட்டரில் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார் திருச்சி சூர்யா.
அத்துடன் பல்வேறு நிதி மோசடி வழக்குகளில் தொடர்புடைய நபர்களுக்கு அமர் பிரசாத் ரெட்டி அடைக்கலம் கொடுத்தார் என்கிற புகார்களும் முன்வைக்கப்படுகின்றன. அவற்றின் உண்மைத்தன்மை உறுதிசெய்யப்படவில்லை.
இந்த நிலையில் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் அமர் பிரசாத் ரெட்டி பதிவிட்டுள்ளதாவது, தமிழக காவல்துறை அடுத்த நான்கு மணி நேரத்திற்குள் என்னை கைது செய்யப் போவதாக செய்தி வந்தது.
ஆளும் அறிவாலய அரசுக்கு எதிராக உண்மையை உரக்க பேசுபவர்களை கைது செய்து அவர்களது குரல்வளையை நசுக்கி விடலாம் என்று ஆளும் திமுக அரசு எண்ணிக் கொண்டிருக்கிறது.
உங்கள் அடக்குமுறைகளுக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை. என்னை கைது செய்தாலும் சிறையில் அடைத்தாலும் மீண்டும் வெளியே வந்து திமுகவுக்கு எதிராக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டே இருப்பேன்.
என் வாழ்க்கையை தேசத்துக்காக என்றோ அர்ப்பணித்து விட்டேன் என பதிவிட்டுள்ளார். அமர் பிரசாத் ரெட்டியின் இப் பதிவின் கீழ், எந்த வழக்கில் போலீசாரால் அவர் கைது செய்யப்படுவார் என நெட்டிசன்கள் பலரும் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
நிதி மோசடி வழக்குகளில் கைது செய்யப்படுவாரா? பாலியல் வழக்குகளில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதா? என அதில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.