குறுங்கோள்களை கண்டுபிடிக்க நாசா வழங்கிய இணைய வழி பயிற்சி : 24 குறுங்கோள்களை கண்டுபிடித்து அசத்திய தமிழக மாணவர்கள்…!
Author: kavin kumar28 February 2022, 8:59 pm
திருச்சி : விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த அறிவியல் ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்காக, நாசா வழங்கும் குறுங்கோள்களைக் கண்டுபிடிக்கும் பயிற்சியில் கலந்துகொண்ட தமிழக பள்ளி மாணவர்கள், 24 குறுங்கோள்களை கண்டுபிடித்துள்ளனர்.
பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆற்றலை வளர்த்து அவர்கள் எதிர்காலத்தில் விண்வெளி மற்றும் ஆராய்ச்சி துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்கிற நோக்கில் குறுங்கோள்களை கண்டுபிடிக்கும் பயிற்சியை இணையத்தின் வாயிலாக நாசா வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த பயிற்சியை தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் தெரிந்து கொண்டு பலன் பெறும் வகையில் அவர்களுக்கான வழிகாட்டுதல்களை திருச்சி ஆஸ்ட்ரோ கிளப்,தமிழ்நாடு வான் அறிவியல் சங்கம்,அறிவியல் பலகை குழுமம் மற்றும் தேசிய அறிவியல் வார குழுமம் இணைந்து அளித்து வந்தது.
இந்நிலையில் தேசிய அறிவியல் வார விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் இணையத்தின் வாயிலாக பயிற்சி பெற்று பல குறுங்கோள்களை கண்டுபிடித்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். விண்வெளி மற்றும் அறிவியல் சார்ந்த விஷயங்களில் அதிகம் ஆர்வம் உள்ள தங்களுக்கு இதுபோன்ற பயிற்சி மிகவும் உற்சாகத்தை அளிப்பதாகவும், குறுங்கோள்களை கண்டுபிடித்த போது தாங்கள் ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் போல் உணர்ந்ததாகவும் மாணவர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:- குறுங்கோள்களை கண்டுபிடிப்பதற்கான இந்த பயிற்சி சர்வதேச அளவில் நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தை பொருத்தவரை பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 குழுக்களாக மாணவர்கள் கலந்து கொண்டனர். மிகச் சிறப்பாக செயல்பட்டு தமிழக மாணவர்கள் 24 குறுங்கோள்களை கண்டுபிடித்துள்ளனர். மாணவர்கள் கண்டுபிடித்த குறுங்கோள்களுக்கு பெயர் வைப்பதற்கான வாய்ப்பையும் நாசா வழங்க உள்ளது. இது போன்ற பயிற்சிகளின் வாயிலாக பள்ளி மாணவ மாணவிகள் தங்களது அறிவியல் ஆற்றலை வளர்த்து கொள்வர். குறிப்பாக இது போன்ற வாய்ப்புகள் அரசு பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்கின்றது என்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தி என தெரிவித்தார்.