தேனி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சியை நோக்கி அரசு பேருந்து நேற்று இரவு புறப்பட்டது.தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே நேற்று நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது பேருந்தில் இருந்த இருவர் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரண்டு நபர்களுக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் தங்களது செருப்பை கழட்டிக் கையில் வைத்துக்கொண்டு அருவருக்கத்தக்க வார்த்தைகளில் சண்டையிட்டுக் கொண்டதால் பேருந்தில் பயணித்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதை தொடர்ந்து அந்தப் பேருந்தின் நடத்துனர் இருவரிடமும் சமாதானம் செய்ய முற்பட்டபோது சமாதானம் ஆகாதால் பேருந்தை ஓரங்கட்டி தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தேவதானப்பட்டி போலீசார் இரண்டு நபர்களையும் அழைத்து மது போதையில் சண்டையிட்டுக் கொண்டனரா என விசாரணை செய்தனர்.பின் நீங்கள் இருவரும் அடுத்த பேருந்தில் செல்லுங்கள் என எச்சரித்தனர்.
பின்னர் இரண்டு நபர்களும் பேருந்தில் உள்ள பயணிகளிடம் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து மீண்டும் பேருந்து இயக்கப்பட்டது. இதனால் திருச்சியை நோக்கி செல்லவிருந்த அரசு பேருந்து நீண்ட நேரம் தேவதானப்பட்டி அருகே நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் மீண்டும் புறப்பட்டது.