டாஸ்மாக் பார் கேசியருக்கு அரிவாள்வெட்டு… தடுக்க சென்ற எஸ்.ஐ. மீதும் தாக்குதல் ; இருவர் கைது…!!

Author: Babu Lakshmanan
20 May 2024, 6:37 pm

குளித்தலை சுங்க கேட் அரசு டாஸ்மாக் கடை பாரில் மாமுல் கேட்டு தகராறு செய்த இரண்டு வாலிபர்கள் பார் கேசியரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா சிங்கம்பட்டியை சேர்ந்தவர் நாச்சிமுத்து மகன் ஸ்ரீதர் (30). இவர் குளித்தலை சுங்ககேட் ரவுண்டானா திருச்சி – கரூர் மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடை அருகே உள்ள பாரில் கேசியராக வேலை பார்த்து வந்துள்ளார். இதில், குளித்தலை தெற்கு மணத்தட்டையை சேர்ந்த செல்வராஜ் மகன்கள் பிரதீப், சேது ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று மாலை 7 மணி அளவில் டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்த ஸ்ரீதரை, தெற்கு மனம் தட்டையை சேர்ந்த செல்வராஜ் மகன்கள் பிரதீப், சேது ஆகிய இருவரும் மாமுல் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில், கேசியர் ஸ்ரீதர் பணம் தர மறுத்ததால் பிரதீப், சேது ஆகிய இருவரும், ஸ்ரீதரை தலை, கழுத்து ஆகிய இடங்களில் அரிவாளால் வெட்டி உள்ளனர். உயிருக்கு பயந்து கடையை விட்டு சாலையில் ஓடி வந்த ஸ்ரீதரை அவர்கள் இருவரும் விரட்டிக்கொண்டு சென்று உள்ளனர்.

அப்பொழுது, சுங்ககேட் பஸ் ஸ்டாப்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குளித்தலை சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஓடி சென்று அந்த வாலிபர்களை மடக்கி உள்ளார். அப்பொழுது, வாலிபர்கள் ஸ்ரீதரை சாலையில் ஓட ஓட வெட்ட முயற்சி செய்த பொழுது, தடுக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் கையில் வெட்டு விழுந்துள்ளது. இதில், அவரின் வலது கையில் மூன்று விரல்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உயிரை பணயம் வைத்த சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வாலிபர்கள் இருவரையும் மடக்கி பிடித்து விசாரணைக்காக குளித்தலை காவல் நிலையம் அழைத்து சென்றார். உயிருக்கு போராடிய பார் கேசியர் ஸ்ரீதர் சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குளித்தலை அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுங்க கேட் பஸ் ஸ்டாப்பில் கணவனே மனைவியை வெட்டியது பிரச்சனை அடங்குவதற்குள் மீண்டும் இரண்டு நாட்களுக்குள் சுங்க கேட்டில் சாலையில் ஓட ஓட வாலிபரை வெட்டியது குளித்தலை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது குளித்தலை பகுதியில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி விட்டதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 401

    0

    0