வகுப்பறையில் ஆசிரியருக்கு கத்திக்குத்து.. திருமணத்துக்கு மறுத்ததால் ஆத்திரச் செயல்!
Author: Hariharasudhan20 November 2024, 1:27 pm
திருமணத்திற்கு மறுத்ததால் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியையை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ரமணி என்பவர் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இன்றும் (நவ.20) அவர் வழக்கம்போல் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்து உள்ளார்.
அப்போது, திடீரென அங்கு வந்த நபர், ஆசிரியை ரமணியை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் ரமணியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த சக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆசிரியை ரமணியை மீட்டு, அரசு மருததுவமனைக்கு சிகிக்சைக்காக அழைத்துச் சென்று உள்ளனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதனிடையே, கத்தியால் குத்திய நபர் குறித்து போலீசுக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். இதனைஒயடுத்து, பள்ளிக்கு வந்த போலீசார், அங்கு இருந்த நபரைப் பிடித்து விசாரித்து உள்ளனர். அப்போது, அவர் மதன் என்பது தெரிய வந்து உள்ளது.
மேலும் விசாரணையில், ஆசிரியை ரமணியை ஒரு தலையாக மதன் காதலித்து வந்ததாகக் கூறியுள்ளார். மேலும், தன்னை திருமணம் செய்ய விருப்பமில்லை என்று கூறியதாலே ரமணியை கத்தியால் குத்திக் கொன்றதாகவும் மதன் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
அதேநேரம், கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட ஆசிரியை ரமணி நான்கு மாதங்களுக்கு முன்பு தான் பணியில் சேர்ந்து உள்ளார். இதனிடையே, இவ்வாறு நடைபெற்ற சம்பவம் குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், ரமணியை கொலை செய்த மதன் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை ரமணியைக் கொன்றது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.
இதையும் படிங்க: தியேட்டர் வாசலில் Movie Review வேண்டாம்.. வெறுப்பின் உச்சத்தில் பாரதிராஜா
இந்த நிலையில், இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டு உள்ள எக்ஸ் தளப் பதிவில், “தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி அவர்களின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் ரமணி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்” எனக் கூறியுள்ளார்.