கணவன் இறந்த துக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை : கன்னியாகுமரியில் நடந்த சோக சம்பவம்…
Author: kavin kumar20 February 2022, 5:34 pm
கன்னியாகுமரி : அருமனை அருகே கணவர் இறந்த துக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள மஞ்சாலுமூடு முதப்பங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜான் பிரைட். இவரது மனைவி மேரி சிந்து (27). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ஜான் பிரைட் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்டு வந்த மேரி சிந்துவிற்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று வீட்டில் தனியாக மேரி சிந்து இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட குடும்பத்தினர் கதறி அழுதனர். தகவல் அறிந்த அருமனை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவர் இறந்த வேதனையில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.