தற்காலிக ஓட்டுநரை வைத்து இயங்கிய அரசுப் பேருந்து நடுத்தெருவில் நின்ற அவலம் : அதிகாலையிலேயே இப்படியா..? திகைப்பில் பொதுமக்கள்..!!
Author: Babu Lakshmanan10 January 2024, 9:57 am
தூத்துக்குடி அருகே தற்காலிக ஓட்டுநரை வைத்து இயக்கப்பட்ட பேருந்து நடுரோட்டில் நின்றதால் பயணிகள் அதிருப்தியடைந்தனர்.
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2வது நாளாக இந்த வேலைநிறுத்தப் போராட்டம் இன்றும் நீடித்து வருகிறது. ஓட்டுநர்களின் தட்டுப்பாட்டை போக்கி, பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற நோக்கில், தற்காலிக ஓட்டுநர்களை வைத்து அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அரசுப் பேருந்துகளின் கண்டிஷன் தெரியாமல் அதனை தற்காலிக ஓட்டுநர்கள் இயக்குவதால், பல்வேறு இடங்களில் விபத்துக்களும், பாதியில் பேருந்து நிற்கும் அவலங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், தற்காலிக ஓட்டுனரை நம்பி அரசு பேரூந்தில் திருச்செந்தூருக்கு பயணித்த பயணிகள் பேருந்து, பழுது காரணமாக தூத்துக்குடி நீதிபதிகள் குடியிருப்பு அருகே நடுரோட்டில் நின்றது. என்ன செய்ய என்று தெரியாமல் தற்காலிக ஓட்டுநரும், நடத்துநரும் பயணிகளோடு நடுரோட்டில் பரிதவித்தனர்.
அவ்வழியாக வந்த மற்றொரு அரசு பேருந்தை வழிமறித்து பழுதான பேருந்தில் இருந்த பயணிகளை அதில் ஏற்றிவிட்டனர். அப்போது, தற்காலிக நடத்துநர் முறையாக டிக்கெட் வழங்கவில்லை என்றும், இந்தப் பேருந்து அனைத்து இடங்களிலும் நிற்காது என்று கூறி, பேரூந்தில் ஏறிய பயணிகளை மீண்டும் நடுரோட்டில் இறக்கி விட்டு சென்றனர்.
தற்காலிக ஓட்டுநரை நம்பி பயனற்ற பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகின்றனர்.