‘உங்களுக்கு ஓசியில் தண்ணீ தரேன்’… குடிநீர் கேட்டு சென்ற மக்களிடம் ஏளனமாக பேசிய அதிகாரி மீது பாய்ந்த நடவடிக்கை!!
Author: Babu Lakshmanan13 February 2024, 12:04 pm
தென்காசி ; குடிநீர் கேட்டுச் சென்ற மக்களிடம் ஓசியில் தண்ணீர் கொடுப்பதாக பேசிய பேரூராட்சி செயல் அலுவலர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை புதூர் பேரூராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகிறது. இது குறித்து லாலா குடியிருப்பு பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் தங்களது பகுதிகளில் குடிநீர் வந்து 22 நாட்களாகி இருப்பதாகவும், காசு கொடுத்து தண்ணீர் வாங்கி குடிக்க முடியவில்லை என்றும், மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், அந்தப் பகுதி மக்கள் புதூர் பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த ஏழாம் தேதி அன்று பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
அப்போது, செயல் அலுவலர் குமார் பாண்டியன் என்பவர் “பொதுமக்கள் நீங்கள் கட்டும் குடிநீர் பணம் 3 மாதங்களுக்கு மட்டுமே, குடிநீர் வடிகால் வாரியத்திற்கு கட்டும் பணம் ஆகும். மீதி பணம் அனைத்தும் பேரூராட்சியில் இருந்து வழங்கப்படுவதாகவும், பொதுநலன் கருதி, நான் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி உங்களுக்கு ஓசியில் தருகிறேன். என தெரிவித்தார். அவரின் இந்த அதிரடி பேச்சு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், இந்த வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதை தொடர்ந்து, ஒரு அரசு அதிகாரி மக்களிடம் இப்படி பேசிய சம்பவம் குடிநீர் கேட்டு வந்த மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் கவனத்திற்கு சென்றதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் பேரூராட்சிகளினுடைய இணை இயக்குனருக்கு ஒரு உத்தரவை பிறப்பித்தார்.
அதன்படி, உடனடியாக பொதுமக்களிடம் குடிநீர் பிரச்சினை குறித்து சமாதானமாக அவர்களை அமைதிப்படுத்தும் செயலில் ஈடுபடாமல், கொந்தளிக்கும் விதமாக பேசிய செயல் அலுவலர் குமார் பாண்டியனை, ராயகிரி பேரூராட்சிக்கு இடமாற்றம் செய்தும், ராயகிரி பேரூராட்சினுடைய செயல் அலுவலராக இருக்கும் சுதாவை புதூர் பேரூராட்சிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.