பரந்தூரில் மீண்டும் பதற்றம்… 433 நாளாக மக்கள் போராட்டம் : ஆய்வு செய்ய வந்த குழுவுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
1 அக்டோபர் 2023, 3:31 மணி
PArandhoor - Updatenew360
Quick Share

பரந்தூரில் மீண்டும் பதற்றம்… 433 நாளாக மக்கள் போராட்டம் : ஆய்வு செய்ய வந்த குழுவுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

சென்னையின் 2வது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் சுமார் 4500 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. ஏகனாபுரம், பரந்தூர், நெல்வாய் உள்ளிட்ட 12 கிராமங்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், நீர்நிலைகள் கையகப்படுத்தப்பட உள்ளன. ஆனால் இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பரந்தூருக்கு சென்று மக்களுக்கு நேரடியாக ஆதரவும் தெரிவித்திருந்தனர்.

ஏற்கனவே பரந்தூர் மக்களின் போராட்டங்களைப் பற்றி கவலைப்படாத அரசுகள், அங்கு விமான நிலையம் அமைந்தே தீரும் என்பதில் உறுதியாக இருக்கின்றன. இருப்பினும் பரந்தூர் சுற்றுவட்டார பொதுமக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இன்று 433-வது நாளாக இந்தப் போராட்டம் தொடருகிறது. ஏற்கனவே 6 கிராம சபை கூட்டங்களை நடத்தி இந்த திட்டத்துக்கு 13 கிராம மக்கள் எதிர்ப்பையும் பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக ஆய்வு செய்ய சென்னை ஐஐடி குழு அங்கு செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுவுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் அசம்பாவிதங்களைத் தடுக்க செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய 3 மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்தனர். போலீஸ் குவிப்பால் இன்று காலை முதலே பரந்தூரில் பெரும் பதற்றம் நிலவியது.

இதனிடையே பரந்தூர் சென்ற ஐஐடி குழுவுக்கு எதிராக, ஐஐடி குழுவே திரும்பி போ என்ற முழக்கங்களை எழுப்பி மக்கள் உக்கிரம் காட்டினர். இதனால் ஐஐடி குழு அங்கு ஆய்வு நடத்த முடியாத நிலை உருவானது. போலீசார் தலையிட்டு சமாதானப்படுத்தியும் மக்கள் விட்டு கொடுப்பதாக இல்லை.

பொதுமக்கள் சாலைகளில் படுத்து மறியல் போராட்டமும் நடத்தினர். இதனால் ஐஐடி குழு ஆய்வை நடத்த முடியாத சூழ்நிலை நிலவியது. பின்னர் பேராசிரியர் மச்சநாதன் தலைமையில் சில இடங்களில் ஐஐடி குழு ஆய்வு நடத்தியது. இதனால் பரந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதற்றம் நிலவியது

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 367

    0

    0