மருதமலையில் பயங்கரம்.. யானை மிதித்து இளைஞர் பலி : பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு!!!

Author: Udayachandran RadhaKrishnan
21 June 2023, 5:05 pm

கோவையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான மருதமலை கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

அதேசமயம் சமீப நாட்களாக மருதமலை, தொண்டாமுத்தூர் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மருதமலை கோவிலில் பக்தர்கள் செல்லும் வழி பாதையில் காட்டு யானை கடந்து சென்றது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று மருதமலை அருகே உள்ள ஐஓபி காலணியில் 28 வயது மதிக்கத்தக்க நபரை காட்டு யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை அடுத்து காட்டு யானைகள் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறாத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சமூக அலுவலர்கள் என பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மருதமலை கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தற்போது கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவில் நடைபாதை மற்றும் சாலையில் செல்லும் நேரத்தினை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மாற்று மாறும்,முடியும் பட்சத்தில் பக்தர்களை நடைபாதையில் அனுமதிக்காமலும் பக்தர்களை இரு சக்கர வாகனங்களில் அனுமதிக்காமலும் கோவில் வாகனத்திலேயே அழைத்துச் செல்லும்படி கோவில் நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளனர்.

மேலும் கோவில் முன்வாயிலில் உள்ள கேட்டை குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் மூடவும் அதன் அருகில் உள்ள ஒற்றையடி பாதையை முற்றிலுமாக மூடவும் அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் விழிப்புணர்வு பலகைகள் வைக்கும்படியும் கண்காணிப்பு ஆட்களை நியமிக்கவும் தவறும் பட்சத்தில் மனித யானை மோதல் ஏதேனும் ஏற்பட்டால் கோவில் நிர்வாகமே பொறுப்பு என வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…