2024ம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு… தச்சன்குறிச்சியில் சீறிப்பாயும் காளைகள்… ஆக்ரோஷமாக அடக்கும் காளையர்கள்..!!
Author: Babu Lakshmanan6 January 2024, 10:05 am
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குருச்சியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடி வாசலில் இருந்து சீறி பாய்ந்து வரும் காளைகளை காளையர்கள் அடக்கி வருகின்றனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று காலை தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.
அமைச்சர்கள் ரகுபதி மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா உள்ளிட்ட அதிகாரிகள் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். விழாவில் 700 காளைகள் பங்கு பெறுவதற்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்று வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்படும் காளைகளை அடக்குவதற்கு 300 காளையர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதனை தொடர்ந்து, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது.
வாடிவாசல் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறி பாய்ந்து காளையர்களுக்கு போக்கு காட்டி சென்று வருகிறது. சில காளைகள் களத்தில் நின்று காளையர்களை திணறடித்து வருகின்றனர். பல காளைகளை காளையர்கள் அடக்கினர்.
காளையர்களிடம் சிக்காமல் சென்ற காளைகளுக்கும், காளைகளை அடக்கிய காளையர்களுக்கும், சைக்கிள் அண்டா, பீரோ, தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள் உள்ளிட்ட பல பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, காளைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அதன் பின்னரே வாடி வாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகிறது.