டாஸ்மாக் பார் நடத்துவதில் முறைகேடு… அரசுக்கு பல கோடி இழப்பு : எம்எல்ஏ தளவாய் சுந்தரம் குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
27 August 2022, 5:15 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில் டாஸ்மாக் பார் நடத்துவதில் நடக்கும் முறைகேடுகளால், தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் பேரிழப்பு என்று கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அனுமதியுடன் மதுபானங்கள் விற்பனை செய்ய 112 டாஸ்மார்க் கடைகள் செயல்பட்டு வருகின்றன. டாஸ்மார்க் கடையின் அருகில் மது அருந்துவதற்கு இக்கடைகளில் பார் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஜுலை 2021-ல் 112 கடைகளுக்குரிய பார்கள் ஏலம் விடப்பட்டதில் 55 கடைகளுக்கு மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டது.

ஏலம் எடுக்கப்பட்ட 55 கடைகளில் 25 கடைகளுக்கு மட்டுமே அரசுக்கு செலுத்த வேண்டிய ஏலத்தொகையினை ஏல தாரர்கள் கட்டியுள்ளனர். மீதமுள்ள 30 பார்களுக்கு ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையினை கட்டவில்லை. ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையினை கட்டவில்லை என்றால் டாஸ்மார்க் பார் நடத்த முடியாது.

இந்நிலையில் ஏலம் விடப்பட்டு பணம் செலுத்தாத 30 பார்களும், ஏலத்திற்கு போகாத 57 பார்களும், ஆக மொத்தம் 87 பார்களில் 10 பார்களுக்கு இடவசதி இல்லாததால் ஏலம் விடப்படவில்லை. மீதமுள்ள 77 பார்களுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏலம் விடப்பட்டதில் 11 கடைகளுக்கு மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டு அரசுக்கு செலுத்த வேண்டிய ஏலத்தொகை ஏலதாரர்களால் செலுத்தப்பட்டுள்ளது.

மீதமுள்ள ஏலம் எடுக்கப்படாத 66 பார்களில் சட்டத்திற்கு விரோதமாக முறைகேடாக பார் செயல்பட்டு வருவதாக புகார்கள் வந்துள்ளன. இதனால் அரசுக்கு வர வேண்டிய 66 பார்களுக்கான வருவாய் தொகை கிடைக்காமல் அரசுக்கு மாதம் ஒன்றுக்கு பலகோடி ரூபாய் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.

அரசியலில் உள்ள சிலரின் அதிகார தூண்டுதலால் சட்டத்திற்கு புறம்பாக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் கிடைக்காமல் செய்து, தனிநபர்கள் அதனைப் பெற்று பயனடைந்து வருகிறார்கள். இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு தவறு இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 880

    0

    0