கழிவறையை ஏலம் எடுப்பதில் விரோதம்… பிரபல ஆடிட்டர் வெட்டிப் படுகொலை.. 4 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு…!!

Author: Babu Lakshmanan
11 May 2022, 11:26 am

தஞ்சையில் கழிவறை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக பிரபல ஆடிட்டர் மகேஷ்வரன் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

தஞ்சை சேர்வைக்காரன் தெருவில் வசித்து வந்தவர் மகேஷ்வரன். பிரபல ஆடிட்டரான இவர் அதே பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கழிவறையை அதிக பணம் கட்டி ஏலம் எடுத்துள்ளார். இதனால், கார்த்தி என்பவருக்கும் ஆடிட்டர் மகேஷ்வரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆடிட்டர் மகேஷ்வரன் நேற்று இரவு தனது தோட்டத்து வீட்டில் சாப்பிட்டு கொண்டு இருந்த போது, கார்த்தி, அர்ச்சுணன், மணிகண்டன் உள்ளிட்ட நான்கு பேர் அங்கு வந்து அவருடன் அமர்ந்து சகஜமாக பேசி உள்ளனர்.

தண்ணீர் குடிப்பதற்காக மகேஷ்வரன் எழுந்து சென்றபோது, பின்புறம் இருந்து அவரை நான்கு பேரும் சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சடலமானார். ஆடிட்டர் உயிர் இழந்ததை உறுதி செய்த கும்பல் அங்கு இருந்து தப்பி சென்றது.

தகவல் அறிந்து வந்த தஞ்சை மேற்கு காவல்நிலைய ஆய்வாளர் சந்திரா, டி.எஸ்.பி கபிலன் ஆகியோர் ஆடிட்டர் மகேஷ்வரன் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கழிவறை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ஆடிட்டர் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தப்பி ஓடிய கொலையாளிகள் 4 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1352

    0

    0