தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்.. முதலமைச்சர் ஸ்டாலின் மவுனம் ஏன்..?சந்தேகத்தை கிளப்பும் பாஜக விசாரணை குழு!!
Author: Babu Lakshmanan1 February 2022, 7:56 pm
சென்னை : தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினின் மவுனம் சந்தேகங்களை கிளப்புவதாக பாஜக விசாரணை குழு உறுப்பினர் விஜயசாந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
அரியலூர் +2 மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, விசாரணை செய்வதற்காக பாஜக தேசிய தலைவர் நட்டா அமைத்த நால்வர் குழு இன்று அரியலூர் மாவட்டம் வடுகப்பாளையத்தில் உள்ள மாணவியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களிடம் விசாரணை செய்தனர். பின்னர் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில் மாணவிக்கு உரிய விசாரணை நடத்தி, உரிய நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து விசாரணை குழுவின் உறுப்பினரும், நடிகையுமான விஜயசாந்தி பேசினார். அப்போது, அவர் பேசியதாவது :- முதலமைச்சர் இந்த விவகாரத்தில் ஏன் மௌனமாக இருக்கிறார். ஒரு தரப்பினருக்கு மட்டும்தான் ஆதரவாக இருப்பீர்களா ? தங்கள் (முதலமைச்சர்) மவுனமாக இருப்பதால், தங்களுக்கு சந்தேகம் ஏற்படுவதாகவும், மாணவியின் மரணத்தில் தவறு இருப்பதாகவும் தெரிகிறது. தவறு செய்தவர்களுக்கு நீங்கள் ஆதரவாக இருப்பீர்கள். உயிர் இழந்த மாணவிக்கு ஆதரவு தர மாட்டீர்களா என கேள்வி எழுப்பினார்.
உயிரிழந்திருப்பது இளம்பெண், அவருக்கு நல்லது நடக்க வேண்டும். மாணவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள். லாவண்யாவிற்கு நடந்தது போல், நாளை வேறு யாருக்கும் நடக்காமல், இந்த பிரச்சினை மீண்டும் நடக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மைக்கேல் பட்டி செல்வதற்கு எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. அதனால் செல்லவில்லை, எனக் கூறினார்.
இதனிடையே, தமிழ்நாட்டில் நீட்தேர்வு, பாலியல் துன்புறுத்தலால் மாணவிகள் இறக்கின்றனர் அதற்கு ஏன் விசாரணை செய்யவில்லை என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நீங்கள் இந்த பிரச்சினையை திசை திருப்ப வேண்டாம். நாங்கள் வந்தது மாணவிற்காக அதை பற்றி பேசுவோம். இந்த விவகாரத்தை அரசு எவ்வளவோ திசைதிருப்ப முயல்கிறது. நீங்களும் அதை செய்ய வேண்டாம். எனவே, மாணவிக்கு இந்த பிரச்சினையில் உரிய நீதி கிடைக்கட்டும். எனவே இந்த பிரச்சினையை திசை திரும்பாமல் இருக்க வேண்டும். விரைவில் எங்கள் அறிக்கையை தேசியத்தலைவர் நட்டாவிடம் நாங்கள் சமிர்ப்பிப்போம், என அவர் தெரிவித்தார்.