அரசு இடத்தை ஆக்கிரமித்து பாலம் கட்டிய குடும்பம்… நீதிமன்ற உத்தரவுப்படி இடித்துத் தள்ளிய அதிகாரிகள்…!!

Author: Babu Lakshmanan
29 January 2022, 7:30 pm

தஞ்சை : அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து பாலம் கட்டியதை, அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவின்படி இடித்து அப்புறப்படுத்தினர்.

கும்பகோணம் அருகேயுள்ள சீனிவாசநல்லூரில், கும்பகோணம் காரைக்கால் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலை வரதராஜன், அறிவிற்கரசு, விமல், ஆண்டாள் மற்றும் முருகன் ஆகிய ஐந்து குடும்பத்தினர், ஆக்கிரமிப்பு செய்தும், தங்கள் வீட்டிற்கு அனுமதியில்லாமல் பாலம் கட்டியதாகவும் புகார் எழுந்தது.

இது குறித்து ரமேஷ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்த நிலையில் அவற்றை இடித்து அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் பேரில், கும்பகோணம் கோட்டாட்சியர் லதா, திருவிடைமருதூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெற்றிவேந்தன், ஆகியோர் முன்னிலையில் பொதுப்பணித்துறையினர் பொக்லைன் இயந்திரம் உதவியோடு, தூர்க்கப்பட்டிருந்த வாய்க்காலை மீண்டும் தூர்வாரியும், ஆக்கிரமித்த இடங்களை மீட்டு, அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த பெரிய பாலங்களையும் பொக்லைன் இயந்திர உதவியோடு முழுமையாக இடித்து அகற்றினர்.

அப்போது சம்மந்தப்பட்ட ஐந்து குடும்பத்தினரும், பல ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருவதாகவும், நாங்கள் பாமக மற்றும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதால், தற்போது உள்ள திமுக எம்பி ராமலிங்கம் தூண்டுதலின்பேரில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று விமல் தெரிவித்தார். ஆக்கிரமிப்பு அகற்ற வந்த கோட்டாசியர் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும், நீதிமன்ற உத்தரவுபடி, தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 2748

    0

    0