பிறந்த ஆண் குழந்தையை சாக்கடையில் வீசிய கொடூரத் தாய் : திரும்பி செல்லும் முன் செய்த அதிர்ச்சி சம்பவம்… சிசிடிவி காட்சி வெளியீடு
Author: Babu Lakshmanan18 March 2022, 1:30 pm
தஞ்சை : பிறந்த ஆண் குழந்தையை கழிவுநீர் சாக்கடையில் பெண் ஒருவர் போடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை அருகே மேல அலங்கம் பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் இன்று காலை சாக்கடையை தூய்மை செய்து கொண்டிருந்தனர். அப்போது பிறந்து சிலமணி நேரமே ஆன ஆண் குழந்தை தொப்புள் கொடியுடன் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மேற்கு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அங்கு வந்த தஞ்சை மேற்கு காவல் நிலைய காவலர்கள் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் ஒரு பெண்மணி அக்குழந்தையின் சடலத்தை கொண்டு வந்து சாக்கடையில் போட்டுவிட்டு, கட்டையால் வைத்து அழுத்தும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இதன் அடிப்படையில் காவல் துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.