வேலியில் தொங்கும் வாய்ப்பாடு.. தார்ப்பாய் போர்த்திய கொட்டகையில் வகுப்பறை… அரசுப் பள்ளியின் அவலம்….!!

Author: Babu Lakshmanan
18 November 2023, 5:47 pm

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பள்ளி கட்டிடம் இல்லாததால் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் தகரக் கொட்டகையில் அமர்ந்து படிக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கீழப்பரட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் கட்டிடம் சேதமடைந்து காணப்பட்டது.

இதனால், புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு கடந்த மே மாதம் பள்ளி விடுமுறையின்போது, அப்பள்ளிக் கட்டிடம் முழுவதும் இடிக்கப்பட்டது. பள்ளி திறக்கப்படுவதற்கு முன்பாக புதிய பள்ளி கட்டிடம் கட்டுமான பணி தொடங்கப்பட்டு 70 சதவீதம் பணிகளை முடித்து, மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ற வகையில் வகுப்பறை கட்டிடங்கள் மட்டும் முதற்கட்டமாக கட்டி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கடந்த ஜூன் மாதம் விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்படும் வரை புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால், பழைய பள்ளியின் எதிரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில், தற்காலிகமாக தார்பாய் போர்த்தி தகர கொட்டகை அமைத்து அதற்குள் மாணவர்கள் தரையில் அமர்ந்தபடி போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல், படிக்கவேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது மழை பெய்து வருவதால், தகர கொட்டகைக்குள் மழைநீர் ஒழுகுவதால் மாணவர்கள், ஆசிரியைகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பள்ளி கோப்புகளும், மாணவர்களின் புத்தகங்கள், நோட்டுக்கள் மழை சாரலில் நனைவதால், கம்பியில் மாட்டி, சாரல் அடிக்காத இடத்தில் தொங்க விட்டுள்ளனர்.

மாணவர்கள் கணிதம் படிப்பதற்கான அட்டவணை உள்ளே மாட்டுவதற்கு இடமில்லாததால், பள்ளியின் வெளியில் உள்ள வேலியில் மாட்டி வைத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, பள்ளி மாணவர்கள், தலைமையாசிரியை மற்றும் ஆசிரியைகளுக்கு சுகாதார வளாகம் மற்றும் உணவு கூடம் சாலையின் எதிரில் உள்ளது. அதாவது சென்னை, அரியலூர், ஜெயங்கொண்டம், விருத்தாச்சலம், உளுந்தூர்பேட்டை ஆகிய ஊருக்கு செல்ல இதுவே பிரதான சாலை என்பதால், எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ள சாலையாகும்.

இதனால், ஆசிரியைகள், நெடுஞ்சாலைத்துறையினர் சாலை பாதுகாப்பு பணியின் போது அணிந்திருக்கும் மின்னும் உடைகளை அணிந்தபடி, மாணவர்களை பாதுகாப்பாக சாலையின் எதிர்புறம் அனுப்பி வைத்து பின்னர், பள்ளிக்கு அழைத்துச் சென்று வருவதாக கூறப்படுகிறது.

மழை காலம் என்பதால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. காலையில் பள்ளியை திறக்கும் போது அச்சத்துடன் திறக்க வேண்டிய நிலை உள்ளதாக ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக, கீழப்பரட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடத்தை விரைந்து கட்டித் தரவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சரவணன் கூறும்போது, பரட்டை கிராமத்தில் பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு ஆறு மாதம் ஆகியும் இதுவரை புதிய கட்டிடம் கட்டுக் கொடுக்கப்படவில்லை. இதனால், மாணவர்கள் தகர கொட்டகை அமைத்து படித்து வருகின்றனர். குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் கடும் அவதியடைந்துள்ளனர். போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையை கடக்க மாணவர்கள் சிரமப்படுகின்றனர். தமிழக அரசு உடனடியாக பள்ளி கட்டிடத்தை கட்டி கொடுக்க வேண்டும், என கூறினார்.

இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தராஜிடம் விளக்கம் கேட்டபோது, இந்தப் பள்ளி இடிக்கப்பட்டபோது, காங்கீரிட் கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு முடிவு செய்த போது, பல்வேறு காரணங்களால், அங்கு மாற்ற முடியாமல், இந்த இடத்திற்கு மாற்றப்பட்டது. புதிய வகுப்பறை கட்டுவதற்கு குழந்தைகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைப்பில், நிதி கோரப்பட்டது, ஆனால் அவர்கள் வழங்குவதற்கு தாமதமானதால், கும்பகோணம் எம்.எல்.ஏ சாக்கோட்டை க. அன்பழகனின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்கி 3 மாதத்திற்குள் முடிக்கப்படும், எனத் தெரிவித்தார்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 566

    1

    0