இது வீடா… இல்ல குடோனா…? கதவை திறந்ததும் குவியல் குவியாக குட்காவும், போலி மதுபானமும்… சோதனை நடத்திய தனிப்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

Author: Babu Lakshmanan
8 August 2022, 10:11 pm

தஞ்சை : தஞ்சை உள்ளிட்ட பல பகுதிகளில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1000 கிலோ குட்கா, 110 லிட்டர் போலி மதுபான பாட்டில்களை தனிப்படை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தஞ்சையில் பல்வேறு இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், பல பார்களில் போலி மது பானங்கள் விற்கப்படுவதாகவும் வந்த தொடர் புகாரை அடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து, தஞ்சை கரந்தை குடைக்காரத் தெருவில் வசித்து வரும் பிரபு என்பவரது வீட்டில் நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜா தலைமையில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, வீட்டில் கட்டுக்கட்டாக 1000 கிலோ குட்கா, லேபில் இல்லாமல் 110 மதுப் பாட்டில்கள் இருந்ததை அடுத்து, அவற்றை பறிமுதல் செய்து, பிரபுவை கைது செய்து, அவர் பயன்படுத்தி வந்த காரையும் கைப்பற்றினர்.

பிரபுவிடம் நடத்திய விசாரணையில், திருவையாறு, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்வதற்காக குட்கா பதுக்கி வைத்து இருந்ததும், போலி மதுப்.பாட்டில்கள், தஞ்சை பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள செம்மீன் பாரில் கள்ள சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்ததும் தெரிந்தது. தொடர்ந்து, பிரபுவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • income tax department sent notice to empuraan director prithviraj பிரித்விராஜ்ஜுக்கு வந்த நோட்டீஸ்; கவர்மெண்ட்டு வேலையை காட்டிருச்சு- பொங்கும் நெட்டிசன்கள்…