அதே பேரு.. அதே இடம்.. காரமடையில் தந்தை பெரியார் உணவகம் மீண்டும் திறப்பு : திராவிட இயக்கத்தை அழிக்க முயற்சி… சுப.வீ குற்றச்சாட்டு!!
Author: Babu Lakshmanan17 September 2022, 6:34 pm
கோவை : காரமடை கண்ணார்பாளையத்தில் அடித்து நொறுக்கப்பட்ட தந்தை பெரியார் உணவகம், இன்று அதே இடத்தில் திமுக கூட்டணி கட்சியினர் புடைசூழ மீண்டும் திறப்பு.
கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள கண்ணார்பாளையம் நால் ரோட்டில் பிரபாகரன் என்பவர் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் திறக்கப்பட இருந்த ஹோட்டலில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் உள்ளே புகுந்த மர்ம கும்பல், அவரை தகாத வார்த்தைகளால் பேசியதோடு கொலைவெறி தாக்குதலிலும் ஈடுபட்டனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காரமடை போலீசார் இந்து முன்னணியை சேர்ந்த ரவிபாரதி, சுனில்குமார் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும், இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் தந்தை பெரியாரின் 144வது தினமான இன்று அவரது பெயரிலேயே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் புடைசூழ, அதே இடத்தில் தந்தை பெரியார் உணவகமானது இன்று திறக்கப்பட்டது. ஹோட்டலை திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
அப்போது,தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருஷ்னண், திமுக மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர் உட்பட பலர் உடனிருந்தனர்.
அப்போது சுப.வீரபாண்டியன் பேசியதாவது :- நமக்கு வாய்த்திருக்கும் எதிரிகள் அடாவடித்தனமானவர்கள். அநாகரீகமானவர்கள். ஒரு கிளையில் இருந்து வந்த இரு கிளைகளுக்கிடையே (திமுக,அதிமுக) மோதல் இருக்கலாம். ஆனால், திராவிட இயக்கம் எனும் மரத்தையே வெட்டிவிட எண்ணி கோடரியோடு அலைகிறவர்கள்.
சிறுபான்மையினர் மக்களை அழித்து விட வேண்டும். நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என நினைக்கிறவர்கள். சமூக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்க நினைப்பவர்கள். நமக்கு கோடரியை வாங்கி திருப்பி வெட்டி பழக்கமில்லை. ஆனால் வெட்டி தூக்கிய எறிய வேண்டிய கடமை நமக்கு உள்ளது, என பேசினார்.