மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் பாராட்டியது மிகப்பெரிய மகிழ்ச்சி : இளநீர் வியாபாரி தாயம்மாள் நெகிழ்ச்சி
Author: kavin kumar31 January 2022, 10:37 pm
திருப்பூர் : அரசு பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி அளித்த இளநீர் வியாபாரி தாயம்மாளை மான் கீ பாத் நிகழ்ச்சியில் பாரத பிரதமர் பாராட்டிய நிலையில், அந்த பாராட்டு தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி அளிப்பதாக தாயம்மாள் தெரிவித்துள்ளார்.
திருப்பூர், மாவட்டம் உடுமலை அருகே சின்னவீரம்பட்டி நடுநிலைப் பள்ளியில், எல்.கே.ஜி., முதல் 8ஆம் வகுப்பு வரை 650 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதனால் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் கூடுதல் கட்டிடம் எழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆகையால், கட்டிடம் எழுப்ப நிதி கோரப்பட்டிருந்தது. இதை அறிந்த சின்னவீரம்பட்டியைச் சேர்ந்த இளநீர் வியாபாரி தாயம்மாள் என்பவர் தனது சொந்த சேமிப்பில் இருந்து ஒரு லட்சம் ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார். இதையறிந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் தாயம்மாள் மற்றும் அவரது கணவர் ஆறுமுகம் (எ) அய்யாவு ஆகியோரை வெகுவாக பாராட்டினர்.

இளநீர் விற்று சிறுகச் சிறுக சேர்த்த தொகையை பள்ளி கட்டிடம் கட்ட வழங்கியது அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது பள்ளிக்கு தாயம்மாள் செய்த உதவி குறித்து பேசி மிகவும் பெருமிதம் கொண்டார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த இளநீர் வியாபாரி தாயம்மாள் கூறியதாவது:- நான் பெரிய அளவில் கல்வி பயிலவில்லை. ஆகையால், கல்வியின் முக்கியத்துவம் குறித்து எனக்கு தெரிந்தது. எனது, கணவரும் 7ஆம் வகுப்பு வரை மட்டும் பயின்றுள்ளார்.

அதனால் தான் இளநீர் வியாபாரத்தில் கணக்கு பார்க்க முடிகிறது. இத்தகைய முக்கியதுவம் வாய்ந்த கல்வி அனைவருக்கும் கிடைக்க என்னால் முடிந்த ஒரு உதவியாக ரூ. 1 லட்சம் அரசு பள்ளிக்கு வழங்கினேன். இதுகுறித்து, பாரத பிரதமர் மான் கீ பாத் நிகழ்ச்சியில் கூறியது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். இதனிடையே உடுமலையை சேர்ந்த தாய் மகளுடன் தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகன் செல்போனில் பேசி வாழ்த்து தெரிவித்தார்.