புத்துயிர் பெறுகிறது 500 ஆண்டுகள் பழமையான புதுமண்டபம்: எதிர்பார்ப்பில் மதுரைவாசிகள்..!!
Author: Rajesh11 March 2022, 5:34 pm
பழம்பெருமையும் தொன்மை சிறப்பும் வாய்ந்த மதுரையின் ஷாப்பிங் காம்ப்லக்ஸாக திகழ்ந்த மீனாட்சி அம்மன் கோயில் எதிரே உள்ள புதுமண்டபம். கோடைக்காலத்தில் கோவிலின் வசந்த விழாவை கொண்டாடுவதற்காக, திருமலை நாயக்க மன்னர் கடந்த 1635ம் ஆண்டு இந்த மண்டபத்தை கட்டியதாக கூறப்படுகிறது.
இந்த மண்டபம் முற்றிலும் கருங்கற்களால் ஆனது. 333 அடி நீளம், 105 அடி அகலம், 25 அடி உயரம் கொண்டது. புது மண்டபத்தில் நான்கு வரிசைகளில் 125 தூண்கள் அமைந்து உள்ளன. இங்கு தலைசிறந்த கலைஞர்கள் மூலம் சிற்பங்கள் நேர்த்தியாகவும், அழகாகவும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
கோயிலின் புனிதமான இடங்களில் ஒன்றாகக் கருதப்படும் புது மண்டபம், தமிழ்நாட்டின் சிற்ப, கட்டடக் கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வருபவர்கள்கூட இந்தத் தூண்களின் அழகை ரசித்துவிட்டுச் செல்கின்றனர்.
500 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த புதுமண்டபத்தில் தற்போது மேற்கூரைகள் மெருகின்றி காட்சி தருகிறது. பல இடங்களில் பறவைகளின் எச்சங்களை பார்க்க முடிகிறது. ஆங்காங்கே சிலந்திகள் வலை பின்னியிருந்தன. இந்த நிலையில் புது மண்டபத்தை புனரமைப்பது என்று தமிழக அறநிலையத் துறை முடிவு செய்தது.
எனவே அங்கு உள்ள கடைகள் அனைத்தும் குன்னத்தூர் சத்திரத்துக்கு 95% அதிகமான கடைகள் மாற்றப்பட்டும், சுமார் 30 கடைகள் மட்டும் செயல்பட்டு வருகிறது. அதனையும் இடமாற்றம் செய்த பின்னர் புது மண்டபத்தை புனரமைக்கும் பணி தொடங்கப்படும். அப்போது இங்கு இடம்பெற்ற உள்ள சிற்பங்கள் புத்தம் புது பொலிவுடன் மெருகூட்டப்படும்.
தொடர்ந்து மதுரை புதுமண்டபத்தில் முப்பரிமான அம்சங்களுடன் கூடிய லேசர் விளக்கு பொருத்தி, அங்கு உள்ள சிற்பங்களின் அழகை சுற்றுலாப் பயணிகள் முழுமையாக அறியும் வகையில் பொலிவூட்ட உள்ளதாக கூறப்படுகிறது. 500 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த புதுமண்டபம் புனரமைக்கப்படும் போது அது மதுரையின் பாரம்பரிய வரலாற்றை சுற்றுலாப்பயணிகளுக்கு வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
0